Home

காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் – 2

திருச்சிற்றம்பலம்

**** www.fb.com/thirumaraiகாரைக்கால் அம்மையாருடைய வரலாறு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணமான 12ம் திருமுறையில் விரிவாகக் கூறப்படுகிறது. அம்மையார் இல்லறத்தில் இருக்குங்கால் இலக்கண இலக்கியங்களைக் கற்றதாகவோ செய்யுள் பாடும் திறமடைந்து திகழ்ந்ததாகவோ கூறப்படவில்லை. அடியார்கட்கு அமுதளித்தல், வேண்டுவன நல்கல் முதலிய திருத்தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. தம்மைக் கணவன் துறந்து விட்டான் என்பதை உணர்ந்தவுடன் அம்மையார் சதைப் பற்றுமிக்க தம்முடைய ஊனுடம்பை யொழித்து எற்புடம்பை அருள வேண்டுகிறார். அம்மையார் வேண்டிய படியே எற்புடம்பு அமைவதோடு தெய்வத் தன்மையும் மிகுதியாக அமைகிறது. தலையால் நடத்தல் முதலிய புதுமைகளும் நிகழ்கின்றன.தெய்வீக முதிர்ச்சியினால் உள்ளத்திலிருந்து அருட் பாடல்களும் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றிய பாடல்கள் தாம் மூத்த திருப்பதிகங்கள்.

**** http://www.fb.com/thirumarai காரைக்கால் அம்மையாருடைய வரலாறு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணமான 12ம் திருமுறையில் விரிவாகக் கூறப்படுகிறது. அம்மையார் இல்லறத்தில் இருக்குங்கால் இலக்கண இலக்கியங்களைக் கற்றதாகவோ செய்யுள் பாடும் திறமடைந்து திகழ்ந்ததாகவோ கூறப்படவில்லை. அடியார்கட்கு அமுதளித்தல், வேண்டுவன நல்கல் முதலிய திருத்தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. தம்மைக் கணவன் துறந்து விட்டான் என்பதை உணர்ந்தவுடன் அம்மையார் சதைப் பற்றுமிக்க தம்முடைய ஊனுடம்பை யொழித்து எற்புடம்பை அருள வேண்டுகிறார். அம்மையார் வேண்டிய படியே எற்புடம்பு அமைவதோடு தெய்வத் தன்மையும் மிகுதியாக அமைகிறது. தலையால் நடத்தல் முதலிய புதுமைகளும் நிகழ்கின்றன. தெய்வீக முதிர்ச்சியினால் உள்ளத்திலிருந்து அருட் பாடல்களும் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றிய பாடல்கள் தாம் மூத்த திருப்பதிகங்கள்.

 

 

எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்

சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்

பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்

கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.

தெளிவுரை : எட்டி, இலவம், ஈகை, சூரை, காரை, கள்ளி முதலிய மரங்களும் செடிகளும் சூழ்ந்ததும் கழுகுகளால் குடர் கௌவப்பட்ட பிணங்கள் நிறைந்ததுமான சுடுகாட்டில் பரந்து வட்டவடிவம் கொண்ட விழிகளையுடைய பேய் முழவங் கொட்ட, கூளி பாட, அழகன் ஆடுவான்.

இரண்டு, திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய நூல்கள்.

மூத்த திருப்பதிகங்கள் இரண்டினுள் சிவபெருமானுடைய தன்மைகள் முதலியன பேசப்படுகின்றன. பதிகங்களின் இறுதியில் அம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று கூறிக் கொள்வதுடன் முதற்பதிகத்தைக் கற்று வல்லவர்கள் ஆனவர்கள் சிவகதி சேர்வர் என்றும், இரண்டாவது பதிகத்தைப் பாடப் பாபநாசம் ஆகும் என்றும் கூறுகிறார்.

நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்

துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்

கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்

அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.

தெளிவுரை : தசையின் இழுது தீயினால் உருகி நிலத்தை நனைக்கவும், நீண்ட பல்லையும் குழிந்த கண்ணையும் உடைய பேய் துணங்கைக் கூத்து சுற்றிலும் ஆடவும், சுடலையை நோக்கி அவிழ்த்து கணங்கள் கூடி பிணங்களைத் தின்று வெறியாடுதலைச் செய்யும் காட்டில், அனலைக் கையிலேந்தி அழகன் ஆடுவான்.

புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ

அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை

உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும்

பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே.

தெளிவுரை : பறவைகள் கொத்தித் தின்னுதலால் பொத்தல் செய்த புலால் வெண் தலையை வெளிப்புறத்தில் நரிபற்ற, அட்கு என்று அழைக்க ஆந்தை வீசவும், அருகில் சிறிய கோட்டான் அஞ்சுமாறு விழிக்க, ஊமன் என்னும் பறவை வெருட்டவும், நரியானது பெருங் குரலாற் கூவ, அந்த ஒலி விண்ணையே பிளக்குமாறு நடனம் ஆடும் இறைவன் பெயரும் இடம் சுடுகாடே.

செத்த பிணத்தைத் தெளியா(து) ஒருபேய் சென்று விரல்சுட்டிக்

கத்தி உறுமிக் கனல்விட்(டு) எறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்

பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்

பித்த வேடம் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.

தெளிவுரை : செத்ததென்று தெரியாமல் பிணத்தை ஒரு பேய் சென்று விரலால் சுட்டிக்காட்டிக் கத்தியும் உறுமியும் நெருப்பில் போட்டு விட்டுச் சென்று, ஒட்டி உலர்ந்து உள்வற்றிய வயிற்றை வருந்துமாறு அடித்துப் பல பேய்கள் அஞ்சியோட பித்த வேடங் கொண்டு பெருமான் நடனம் ஆடுவான்.

முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக்

கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே

புள்ளி உழைமான் தோலொன்(று) உடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்

பள்ளி இடமும் அதுவே யாகப் பரமன் ஆடுமே.

தெளிவுரை : முள்மரம் தீய்ந்து, முளரி என்னும் முள் செடியும் கருகி, மூளை சொரிந்து எழுந்து கள்ளியும் வற்றி விளாமரம் விளங்குகின்ற மிகக் கொடிய காட்டில் புள்ளிகளை உடைய ஆண்மான் தோலை முதுகில் போட்டுக் கொண்டு கோயிலாகிய இடமும் அதுவேயாக இறைவன் ஆடுவான்.

வாளை கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை

மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில்

தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்

கூளிக் கணங்கள் குழலோ(டு) இயம்பக் குழகன் ஆடுமே.

தெளிவுரை : வாளைப் போல் விளங்க வளைந்த ஒளிவிடும் பல்லும் நிறமும் உடைய சிறிய கோட்டான் முளையோடு கூடிய தலையும் பிணமும் விழுங்கி ஒலிக்கும் சுடுகாட்டில் தாளிப் பனையில் இலை போன்ற மயிரும் தீப்போல் எரியும் வாயையும் கண்களையும் உடைய பேயும் கூளிகளின் கூட்டமும் குழல் ஓசையோடு வாசிக்க இறைவன் ஆடுவான்.

நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்

சிந்தித் திருந்தங்(கு) உறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின்

முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே

அந்தி நிருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.

தெளிவுரை : கிளறிக் கிடந்த சுடுகாட்டைத் தடவி அருந்தும் உணவு ஏதும் இன்றி நினைத்த வண்ணமாய் அங்கு உறங்கும் சிறுபேய் சிரமப்படுகின்ற சுடுகாட்டில் முன்பு தேவர்கள் மத்தளம் வாசிக்க முறைமை தவறாமல் யுகமுடிவாகிய அந்திப் பொழுதில் ஆடும் நடனத்தை , கையில் தீயை ஏந்தி இறைவன் ஆடுவான்.

வேய்கள் ஓங்கி வெண்முத்(து) உதிர வெடிகொள் சுடலையுள்

ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய

பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின்

மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே.

தெளிவுரை : மூங்கில்கள் உயர்ந்து உதிர்த்த வெண் முத்துக்கள் நாலாபக்கங்களிலும் சிதறிக் கிடக்கும் சுடலையுள் ஓய்ந்த நிலையில் வெளிறிக் கிடக்கும் கூந்தலையுடையதும் அலறுகின்ற பிளந்த வாயையுடையதுமான பேய்கள் ஒன்று கூடிப் பிணங்களைத் தின்று அணங்கு ஆடுகின்ற சுடுகாட்டில் சிவபெருமான் ஆட, பார்வதி தேவியார் மருண்டு பார்க்கும்.

கடுவன் உகளும் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய்

இடுவெண் தலையும் ஏமப் புகையும் எழுந்த பெருங்காட்டில்

கொடுவெண் மழுவும் பிறையும் ததும்பக் கொள்ளென்(று) இசைபாடப்

படுவெண் துடியும் பறையும் கறங்கப் பரமன் ஆடுமே.

தெளிவுரை : ஆண் குரங்கு சுற்றித்திரியும் மூங்கில்கள் நிறைந்த இளமரச் சோலையில் கழுகும் பேயும் இடுகின்ற வெண்தலையும் ஏமப்புகையும் எழுந்த சுடுகாட்டில் கொடுமையைச் செய்யும் வெள்ளிய மழுவும் பிறைச் சந்திரனும் ததும்ப, கொள்ளென்று இசை பாடவும், உடுக்கையும் பறையும் ஒலி செய்யவும், மேலோனாகிய இறைவன் ஆடுவான்.

குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்

இண்டை படர்ந்த இருள்சூழ் மயானத்(து) எரிவாய் எயிற்றுப்பேய்

கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென்(று) இசைபாட

மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.

தெளிவுரை : குழி விழுந்த வயிறும் குறிய சிறிய நெடியதாய் விளங்கும் பேய் இண்டு என்ற காட்டுச் செடி படர்ந்த, இருள் சூழ்ந்த மயானத்தில் எரிகின்ற வாயையும் பற்களையும் உடைய பேயை அச்சுறுத்திக் குழந்தையைத் தடவி ஏற்றுக்கொள் என்று இசைபாட நெருங்கி விளங்கிய சடைகள் தொங்குமாறு இறைவன் ஆடுவான்.

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்

ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே

காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்

பாடல் பத்தும் பாடி ஆட பாவம் நாசமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சடை மீது உடையவர். இடையில் பாம்பைக் கச்சையாகக் கட்டியுள்ளவர்; திருஆலங்காட்டில் எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் தீப்போன்ற வாயையும் பற்களையும் உடைய காரைக்கால் அம்மையார் பாடிய பத்துப் பாடல்களையும் பாடி ஆட பாவங்கள் இல்லாது போகும் என்பதாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s