Home

1காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் – 1

காரைக்கால் அம்மையாருடைய வரலாறு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணமான 12ம் திருமுறையில் விரிவாகக் கூறப்படுகிறது. அம்மையார் இல்லறத்தில் இருக்குங்கால் இலக்கண இலக்கியங்களைக் கற்றதாகவோ செய்யுள் பாடும் திறமடைந்து திகழ்ந்ததாகவோ கூறப்படவில்லை. அடியார்கட்கு அமுதளித்தல், வேண்டுவன நல்கல் முதலிய திருத்தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. தம்மைக் கணவன் துறந்து விட்டான் என்பதை உணர்ந்தவுடன் அம்மையார் சதைப் பற்றுமிக்க தம்முடைய ஊனுடம்பை யொழித்து எற்புடம்பை அருள வேண்டுகிறார். அம்மையார் வேண்டிய படியே எற்புடம்பு அமைவதோடு தெய்வத் தன்மையும் மிகுதியாக அமைகிறது. தலையால் நடத்தல் முதலிய புதுமைகளும் நிகழ்கின்றன. தெய்வீக முதிர்ச்சியினால் உள்ளத்திலிருந்து அருட் பாடல்களும் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றிய பாடல்கள் தாம் மூத்த திருப்பதிகங்கள்.

திருச்சிற்றம்பலம்

கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்

தங்கி யலறி யுலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

அங்கங் குளிர்ந்தன லாடும்எங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே.

தெளிவுரை :  மார்பகங்கள் வற்றி, நரம்புகள் மேல் எழுந்து, கண்கள் குழி விழுந்து, பற்கள் விழுந்து, வயிறு குழி விழுந்து தலை மயிர் சிவப்பாகி, கோரைப் பற்கள் இரண்டும் நீண்டு, கணுக்கால் உயர்ந்து நீண்ட கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி, அலறி, காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.

கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை

விள்ள எழுதி. வெடுவெடென்ன நக்கு வெருண்டு விலங்குபார்த்து

துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் சுட்டிட முற்றும் சுளிந்துபூழ்தி

அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : கள்ளிக் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி கொள்ளிக் கட்டையை வாங்கி குழைத்து மையை அழித்து எழுதி நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சியடைந்து குறுக்கே நோக்கி, குதித்து சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும். இச்செய்யுளில் பேய்களின் செயல்கள் கூறப்பட்டன.

வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப, மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே

கூகையோ(டு) ஆண்டலை பாடஆந்தை கோடதன் மேற்குதித்(து) ஓடவீசி

ஈகை படர்தொடர் கள்ளிநீழல் ஈமம் இடுசுடு காட்டகத்தே

ஆகம் குளிர்ந்தனல் ஆடும்எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : பாலை நிலத்துக்குரிய வாகை மரத்தின் முற்றிய வெண்மையான நெற்றுக்கள் காற்றினால் ஒலி செய்யவும், அறிவை மயக்கும் திணிந்த இருளையுடைய நள்ளிரவில் கூகை (கோட்டான்) யோடு ஆண் தலை போன்ற வடிவுடைய பறவை பாடவும், ஆந்தை கொம்புடன் அதன் மேற்குதித்து ஓடுமாறு வீசி கொடி படர்ந்த கள்ளியின் நீழலில் ஈமம் அடுக்கப்பட்ட சுடுகாட்டில், உடல் குளிர்ந்து அனலில் ஆடுகின்ற எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.

குண்டில்ஓ மக்குழிச் சோற்றைவாங்கிக் குறுநரி தின்ன அதனைமுன்னே

கண்டிலம் என்று கனன்றுபேய்கள் கையடித்(து) ஓடிடு கா(டு)அரங்கா

மண்டலம் நின்றங்(கு) உளாளம்இட்டு, வாதித்து வீசி, எடுத்தபாதம்

அண்டம் உறநிமிர்ந்(து) ஆடும்எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : ஆழமான வேள்விக் குழியில் உள்ள சோற்றை எடுத்து குறுநரி தின்னவும், அதை முன்பே பார்க்கவில்லையே என்று பேய்கள் கோபங் கொண்டு கையடித்துச் சுடுகாட்டைச் சுற்றி ஆடும் அரங்காக வளைந்து சுற்றி வந்தும், மாறி வந்தும், எல்லா உலகங்களிலும் பொருந்துமாறு ஆடுகின்ற எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே.

விழுது நிணத்தை விழுங்கியிட்டு வெண்தலை மாலை விரவப்பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணா(து)

அழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : விழுதாக உள்ள ஊனை விழுங்கிவிட்டு, வெண்மையான தலைமாலையைப் பரவ அணிந்து, பேயானது தன்னுடைய குழந்தையைக் காளியென்று பெயரிட்டு, சிறப்புடன் வளர்த்து, தூசு அகற்றி, பால் கொடுத்துச் சென்ற தாயின் வரவைக் காணாமல் அழுது உறங்குகின்ற ஊழிக்கால ஈமத்தில் ஆடுகின்ற என் அப்பன் வாழும் இடம் திருஆலங்காடே.

பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய் பருந்தொடு கூகை பகண்டைஆந்தை

குட்டி யிடமுட்டை கூகைபேய்கள் குறுநரி சென்றணங்(கு) ஆடுகாட்டில்

பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே

அட்டமே பாயநின்(று) ஆடும்எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : பட்டு அடிபட்ட நீண்ட நகத்தையும், மாறுபட்ட கால்களையும் உடைய பேய், பருந்து, கூகை, சீவற் பறவை, ஆந்தை ஆகியவை முட்டையிடவும் குறுநரி வெறியாடவும் பின்புறம் அடித்து, சுடுகாட்டில் இட்ட பிணத்தினை வெளியே எடுத்து, குறுக்கே பாய நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் கோயில் கொண்டிருக்கும் இடம் திருஆலங்காடே.

சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட்(டு) ஓடிஆடித்

தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் தான்தடி தின்றணங்(கு) ஆடுகாட்டிற்

கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் காலுயர் வட்டணை இட்டுநட்டம்

அழல்உமிழ்ந்(து) ஓரி கதிக்கஆடும் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : சுழலுகின்ற நெருப்புக் போன்ற கண்களையுடைய கொள்ளிவாய்ப் பேய்கள் ஒன்று கூடி துணங்கை என்னும் கூத்தை ஆடி, நெருப்பில் எறியப்படும் பிணத்தை எடுத்து அதன் ஊனைத்தின்று ஆடுகின்ற சுடுகாட்டில் கழலின் ஓசையைச் சிலம்பு ஒலிக்க, காலை உயர்த்தி வட்டனை என்னும் சுழன்றாடும் நடனம் நெருப்பைக் கக்கி நரியும் ஆட ஆடுகின்ற எங்கள் அப்பன் வாழும் இடம் திருஆலங்காடேயாகும்.

நாடும் நகரும் திரிந்துசென்று, நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத்(து) இட்டமாடே முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்

காடும் கடலும் மலையும் மண்ணும் விண்ணும் சுழல அனல்கை யேந்தி

ஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : நாடும் நகரும் திரிந்து சென்று நல்ல நெறியை விரும்பிய வரை மூடிப் புதைத்த சுடுகாட்டில் வந்தணைந்த பேய்க் கூட்டம் காடும், கடலும் மலையும் மண்ணும், விண்ணும் சுழலுமாறு நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற, பாம்பை அணிந்து புயங்கக் கூத்தை ஆடுகின்ற எங்கள் தலைவன் கோயில் கொண்டிருக்கும் தலம் திருஆலங்காடேயாகும்.

துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு, தகுணிதந் தந்துபி தாளம்வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடு ஆடும்எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும் இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அத்தன்மையோடு ஆடுகின்ற எங்கள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருஆலங்காடேயாகும்.

புந்தி கலங்கி மதிமயங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்

சந்தியில் வைத்துக் கடமைசெய்து தக்கவர் இட்டசெந் தீவிளக்கா

முந்தி அமரர் முழலின்ஓசை திசைகது வச்சிலம்(பு) ஆர்க்கஆர்க்க,

அந்தியில் மாநடம் ஆடும்எங்கள் அப்பன் இடம்திரு ஆலங்காடே.

தெளிவுரை : அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.

ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித்(து) ஒக்கலித்துப்

பப்பினை யிட்டுப் பகண்டை யாட பாடிருந்(து) அந்நரி யாழ்அமைப்ப

அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்

செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.

தெளிவுரை : ஒப்பில்லாதவனது, பேய்கள் கூடி ஒன்றை ஒன்று அடித்து, களிப்பு மிகுதியால் ஆரவாரித்து இசையை முழக்கி, பகண்டை பாடுதலுக்கு ஏற்ப யாழ் வாசித்தல் போல் நரி கூவ, இறைவனை அணியாகக் கொண்டுள்ள திருஆலங்காட்டுள் அடிகளை, முடிக்கப்படாமல் செடி போல் விரித்த மயிர் நிறைந்த தலையினையுடைய காரைக்காற் பேய் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் காரைக்கால் அம்மையார் பாடிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் பாட வல்லவர் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s