அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய் வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும்; நாம் அடியோம்;
செய் வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
காவினை இட்டும் குளம்பல தொட்டும், கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து, மலர்அடி போற்றுதும், நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டுஎமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும்மழுவும் இவை உடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
விண்உலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர்! உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து, உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
மறக்கும் மனத்தினை மாற்றி, எம்ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர்கொடு வந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை ஏத்ததும்; நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில்அடர்த்து அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றும்; தொழுது வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
சாக்கியப் பட்டும் சமண்உருஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்போகமும் பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்.
பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில்இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.