7:25 விருத்தாச்சலம்

பொன் செய்த மேனியினீர், புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
முன்செய்த மூஎயிலும் எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;
மின்செய்த நுண்இடையாள் பரவை இவள்தன் முகப்பே,
என்செய்தவாறு அடிகேள், அடியேன் இட்டளம் கெடவே.

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே, எனக்குச்
செம்பொனைத் தந்தருளித், திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்;
எம்பெருமான், அருளீர்; அடியேன் இட்டளம் கெடவே.

பத்தா, பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே,
முத்தா, முக்கணனே, முதுகுன்றம் அமர்ந்தவனே,
மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே,
அத்தா, தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே.

மங்கை ஓர்கூறு அமர்ந்தீர்; மறைநான்கும் விரித்து உகந்தீர்;
திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்றமர்ந்தீர்;
கொங்கை நல்லாள் பரவை, குணங்கொண்டிருந்தாள் முகப்பே
அங்கணனே, அருளாய், அடியேன் இட்டளம் கெடவே.

மையாரும் மிடற்றாய், மருவார் புரம்மூன்று எரித்த
செய்யார் மேனியனே, திகழும் முதுகுன்று அமர்ந்தாய்;
பைஆரும் அரவுஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்;
ஐயா தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே.

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்துஇறைஞ்ச, முதுகுன்றம் அமர்ந்தவனே,
படிஆரும் இயலாள் பரவைஇவள்தன் முகப்பே,
அடிகேள், தந்தருளீர், அடியேன் இட்டளம் கெடவே.

கொந்தணவும் பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தணவும் மதிசேர், சடைமாமுது குன்று உடையாய்
பந்தணவும் விரலாள் பரவைஇவள் தன் முகப்பே,
அந்தணனே, அருளாய், அடியேன் இட்டளம் கெடவே.

பரசுஆரும் கரவா, பதினெண் கணமும்சூழ
முரசார்வந்து அதிர, முதுகுன்றம் அமர்ந்தவனே,
விரைசேரும் குழலாள், பரவைஇவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே.

ஏத்தாது இருந்து அறியேன்; அமையோர்தனி நாயகனே;
மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தாரும் குழலாள் பரவை இவள்தன் முகப்பே,
கூத்தா, தந்தருளாய், கொடியேன் இட்டளம் கெடவே.

பிறை ஆரும் சடைஎம்பெருமான், அருளாய் என்று
முறையாய்வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார்தம் குரிசில், வயல்நாவல் ஆரூரன், சொன்ன
இறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: