தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே; எந்தை புகலூர் பாடுமின்; புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும், ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
மிடுக்கு இலாதானை வீமனே, விறல் விசயனே, வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்கொள் மேனி, எம் புண்ணியன், புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
காணியேல் பெரிது உடையனே, கற்று நல்லனே, சுற்றம் நல்கிளை
பேணியே, விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழப்புள் சிலம்பும், தண்புகலூர் பாடுமின், புலவீர்காள்,
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு, யாதும் ஐயுறவு இல்லையே.
நரைகள் போந்து மெய் தளர்ந்து, மூத்து, உடல்நடுங்கி நிற்கும் இக்கிழவனை
வரைகள் போல், திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரைவேள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனைப் பாவியை, வழக்கு இல்லøயைப்
பஞ்ச துட்டனை, சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன், புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
நெஞ்சில் நோய் அறுத்து, உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
நலம் இலாதானை, நல்லனே என்று, நரைத்த மாந்தரை, இளையனே
குலம் இலாதானைக் குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்
அலமராது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
நோயனைத், தடந்தோளனே என்று, நொய்ய மாந்தரை, விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்;
ஆயம் இன்றிப் போய், அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும் ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே, எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அல்லல் பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
கற்றிலாதானைக், கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை, முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
தையலாருக்கு ஓர் காமனே என்றும், சால நல் வழக்குடையனே
கைஉலாவிய வேலனே என்று, கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதியாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்;
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு, யாதும் ஐயுறவு இல்லையே.
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன், வனப்பகை அப்பன், சடையன் தன்
சிறுவன், வன் தொண்டன், ஊரன், பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு, யாதும் ஐயுறவு இல்லையே.