முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூஎயில்;
நொடிப்பதுமாத்திரை நீறு எழக் கணை நூறினார்;
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
தூறு அன்றி ஆடுஅரங்கு இல்லையோ? சுடலைப் பொடி-
நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான்மகள்
கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்-
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
தட்டுஎனும் தட்டுஎனும்,—தொண்டர்காள்!—தடுமாற்றத்தை,—
ஒட்டுஎனும் ஒட்டுஎனும் மா நிலத்து—உயிர் கோறலை;
சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை,
வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள்இருள்
எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டுஇடைச்
சிரிதலைமாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை,
பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய
மாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை,
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்,
பேயனே! பித்தனே! என்பரால், எம்பிரானையே!
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய்,
துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடிஇணை போற்றுவார்;
மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான்இளம்-
பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
தாரும், தண்கொன்றையும் கூவிளம் தன் மத்தமும்;
ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்;
ஊரும், ஒன்று இல்லை,—உலகுஎலாம்,—உகப்பார் தொழப்
பேரும் ஓர்ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்;
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ? இமவான்மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி,—பெம்மான்—மதக்-
கரியின்உரிஅல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக்கண்டத்து,
ஈசனை ஊரன் எட்டோடுஇரண்டு விரும்பிய—
ஆயின சீர்ப் பகைஞானிஅப்பன், அடித்தொண்டன்தான்,
ஏசின—பேசுமின், தொண்டர்காள், எம்பிரானையே!