ஆலம்தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப் பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈர்உரி போர்த்து உகந்தானைக் காமனைக் கனலா விழித்திõனை
வரிகொள் வெள்வளையான் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்காணக் கண் அடியேன் பெற்றவாறே.
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந் தொழிலானை
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை வாள்அரா மதிசேர் சடையானை
கெண்டை அம் தடங்கண் உடை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள் செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவ தேவனை, செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக்காணக் கண் அடியேன் பெற்றவாறே.
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை,வேதம்தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண்இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன் தன்னை
பந்தித்த வினைப் பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தம் இல் புகழாள் உமைநங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
வரங்கள் பெற்று உழல், வாள் அரக்கர் தம் வாலிய புரம் மூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டனைப்
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.
எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்காணக் கண் அடியேன் பெற்றவாறே.
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக் காணக்கண் அடியேன் பெற்றது என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானைக்குளிர் பொழில், திரு நாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார் நன்னெறி உலகு எய்துவர்தாமே.