பெரியாழ்வார் திருமொழி –
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத்தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ
என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலைமேல் இருந்துஉன்னையே சுட்டிக்காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற
மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக்கூகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
சிறியன் என்று என்இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா
மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே