கண்ணன் மீது கன்னியர் காமுறல்

1

பெரியாழ்வார் திருமொழி-
**********************
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
வசை அறத் திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி
பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்
அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே

சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்
மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்
அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்
கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்
கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில்லா வளை கழன்று துகில்
ஏந்து இள முலையும் என் வசம் அலவே

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே

சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்
வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை
அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே

சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே

வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள்
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக்
கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: