திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார் அருளியது
– மங்கல வாழ்த்து
சிவபெருமான்:
******************************
ஆதி நடு அந்தம் இல்லா அளவில் சோதி அருள் ஞானமூர்த்தியாய் அகிலம் ஈன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுட சூளாமணியாய் வையம் போற்றப் பாதி மதி அணி பவளச் சடைகள் தாழப் படரொளி அம் பலத்தாடும் பரனார் பாதத் தாது மலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.
முதல் நடு இறுதியின்றி ஒருவராலும் அறியப்படாத பரசொரூபப் பிரகாசத்தையுடைய அருளாகிய ஞானமே திருமேனி யாகக்கொண்டு தனது காருண்யத்தினாலே சகளீகரித்துப் பிரபஞ்சத்தை யுண்டாக்கிய அந்தப் பரமேசுவரியையுந் தன்னிடப்பாக முழுதினும் அடக்கிப் பிரமன் மால் முதலாகிய தேவர்களது மகுடரத்திநம்போலும் மிக்க சத்தி சிவமாகிய சகள நிஷ்கள் சொரூபமாய் உலகத்துள்ளார் துதிப்ப ஒற்றைக்கலையை அலங்காரமாக அணிந்த பவளம்போன்ற சடைகளைத் தாழவிட்டு விரிந்த ஒளியையுடைய திருவம்பலத்தின்கண்ணே நிருத்தஞ் செய்தருளுகின்ற மேலான பரமனது சீபாதங்களாகிய தாதுக்கள் மிக்க தாமரைகளைத் தலையின்மீது வைத்துத் தளர்ச்சியில்லாத மிக்க அன்பு மிகவும் உண்டாம்படி நில்லா நின்றேம்.
=====================================
சத்தி :
******************************
ஈசனருள் இச்சை அறி வியற்றல் இன்பம் இலயமொடு போகமதி கார மாகித்
தேசருவம் அருவுருவம் உருவமாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்
பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவையளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்டாசகலும் அடியருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னிவைப்பாம்.
ஈசன் அருள் அதிகாரமாகி கருத்தாவை விட்டு நீங்காத சத்தியானது அவனது கருணையினால் பராசத்தியும் இச்சா சத்தியும் ஞானசத்தியும் கிரியாசத்தியும் திரோதான சத்தியும் இவையன்றி இலயபோக அதிகார அவத்தைகளுமாய், தேசருவம் செல்வமாகி அந்தப் பிரகாசமாகிய இறைவனுக்கு அரூபம் ரூபாரூபம் ரூபமெனப்பட்ட மூன்று முறைமைக்கும் அம்முறைமைகளாகிய வடிவுந் தானாய் இறைவன் அங்ஙனம் கொண்டருளுந் திருமேனிக்கு அந்தந்தச் சத்திகளும் தானாய்ப் பிரபஞ்சங்களும் பதார்த்தங்களுந்தானாய், பேசரிய நோக்கிஅவன் எடுத்துக்கொண்ட திருமேனிக்கேற்ற சத்தியாய் நின்று எண்ணுதற்கரிதாகிய எல்லா ஆன்மாக்களையும் படைத்து அளித்து, பெரும் போகம்…. ஒழித்திட்டு ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்கட்கீடாகச் சுவர்க்காதி பதங்களையுங் கொடுத்து சநநங்களையுங் கெடுத்து அவ்விறைவனோடுங் கூடிநிற்க முத்தியையுங் கொடுத்து, ஆசு அகலும் அன்னை அஞ்ஞான நீங்கின அடியார் இருதயத்திற் சிவபெருமானோடுங் கூடியிருக்கும் உலக மாதாவினுடைய, அருட் பாதமலர் சென்னி வைப்பாம் கிருபையாகிய திருவடித் தாமரைகளை எந்தலைமேல் வைத்துக் கொள்ளா நின்றேம்.
=====================================
விநாயகக் கடவுள்:
******************************
இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றால் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்
தயங்குபேர் ஒளியாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப் பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள்கோட்டுப் பெரிய பண்டிக் கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.
இயம்புநூல் இப்பொழுது சொல்லுநூல், இருந்தமிழின் …. வேண்டித் தமிழினாற் செய்யுமிச் செய்யுள் பஞ்சாதிகாரங்கள் சொல்லும் வழியால் வருங்குற்றமொழிந்து இனிது முடிதலைவிரும்பி, தயங்குபேரொளியாகி விளங்கும் பெரிய ஒளியேயாகி, எங்கு நின்ற தலைவனார் எவ்விடத்தும் பூரணமாய் நின்ற இறைவர், மலைமாது தன்னோடு ஆடிப்பயந்த அசுரரைக் கொல்லு நிமித்தமாக இமையமாதோடுங்கூடி உண்டாக்கப்பட்ட, ஐங்கரம் தன் ஐந்துகையினையும் நான்குதோளினையும் மூன்று கண்ணினையும் இரண்டு பாதத்தினையும் பரியதாகி நீண்டதொரு கொம்பினையும் பெரிய வயிற்றினையுமுடைய யானைமுகத்து விநாயகனது, அடிக்க மலங்கள் செய்வாம் சீபாதகமலங்களை விரும்பித் துதித்துச் சித்தத்திலுமுறும்படி வைத்து மிக்க விருப்பத்தைச் செய்யாநின்றேம்.
=====================================
சுப்பிரமணியக் கடவுள்:
******************************
அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை
திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்
பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையிற் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள்
கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந்தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.
அருமறை குருளை தெரிதற்கரிய வேதங்களும் ஆகமங்களும் ஆறங்கங்களும் அரிதாகிய கலைஞானங்களுமாகிய நூல்களை ஆராய்ந்த அகத்தியமாவிருடிக்கு வேதவியாக்கியாநத்தை அருளிச் செய்த ஞானாசாரியனாகிய இளைய பிள்ளை, திருமறைமா…தெய்வம் அழகிய வேதத்தைக் கற்றுவல்ல மிக்கவிருடிகட்குத் தலைவனாகிய விருடி, தேவர்கட்குச் சுவாமி, சிவனுக்குக் கிருபையாலுண்டாகிய புத்திரன், தவத்தின் மிக்கோர்க்கு வழிபடுந்தெய்வம், பொரும் அறையார் கந்தன் ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய பொருகின்ற வீரர்க்கு வீரன், ஒழியாது கையின் மலருமஞ்சனமுங் கொண்டு துதிக்கும் அடியார்கள் கருப்பத்தில் அழுந்தாதவகை அருள் செய்து மோக்ஷத்தைக் கொடுக்குங் கந்தசுவாமி, கழலிணைகள்… வைப்பாம் அவனது சீபாதங்களிரண்டையும் எந்தலைமீதும் இதயத்திலும் வைத்துக்கொள்ளாநின்றேம்.
=====================================