திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி
********************
யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் [ காஞ்சிபுரம், மாவட்டம் திருவெக்கா]
****************************************
2063 கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே
2064 முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே