திருமங்கை ஆழ்வார்; பெரிய திருமொழி
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர்
வள நாடு மூட இமையோர்
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன
அரண் ஆவன் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி
அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை
மறவாது இறைஞ்சு என் மனனே
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி
திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப
இமையோர்கள் நின்று கடைய
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து
சுழலக் கிடந்து துயிலும்
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன
திருமால் நமக்கு ஓர் அரணே
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர்
உம்பர்-உலகு ஏழினோடும் உடனே
மாதிரம் மண் சுமந்த வட குன்றும் நின்ற
மலை ஆறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின்
ஒருபால் ஒடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி
அது நம்மை ஆளும் அரசே
தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க
எரி கான்று இரண்டு தறு கண்
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று
பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர்-ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம்
மதியாது சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம்-அது வையம் மூடு
பெரு நீரில் மும்மை பெரிதே
வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு
ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர
செந் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம்
அடி மூன்று இரந்து பெறினும்
மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச
மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம்-
அது நம்மை ஆளும் அரசே
இரு நில மன்னர்-தம்மை இரு நாலும் எட்டும்
ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க
மழுவாளில் வென்ற திறலோன்
பெரு நில-மங்கை மன்னர் மலர்-மங்கை நாதர்
புலமங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி
யவர் நம்மை ஆள்வர் பெரிதே
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன
இனம் ஆய மான் பின் எழில் சேர்
அலை மலி வேல்கணாளை அகல்விப்பதற்கு
ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை
பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
திருமால் நமக்கு ஓர் அரணே
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண
முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த
அது நம்மை ஆளும் அரசே
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது
தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி
உக உண்டு வெண்ணெய் மருவி
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட
அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல்
வினைப் பற்று அறுக்கும் விதியே
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று
கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
திருமாலை வேலை புடை சூழ்
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு
கலிகன்றி சொன்ன பனுவல்
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்
அவர் ஆள்வர் உம்பர் உலகே