வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே
இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே