விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல் அரவம்,
மங்குலொடு நீள கொடிகள் மாடம்மலி நீடுபொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே.
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
மலையின் நிகர் மாடம் உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்;
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன்சடையினுள்
அலைகொள் புனல் ஏந்து பெருமான், அடியை ஏத்த வினை அகலும் மிகவே.
காலையொடு துந்துபிகள் சங்கு, குழல், யாழ், முழவு காமருவு சீர்
மாலை வழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி அதன் மேல் ஓர் சுடர் நாகம் அசையா அழகிதாப்
பாலை அன நீறுபுனை வான், அடியை ஏத்த வினை பறையும் உடனே.
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல் ஆடி மகிழ் மாகறல் உளான்
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக ஏத்தி வழி பாடு நுகரா எழுமினே.
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சுமலி பூம்பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்;
வஞ்சமத யானைஉரி போர்த்து மகிழ் வான் ஓர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடி யாரை நலியா வினைகளே.
மன்னும் மறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடி உடனாய்
இன்ன வகை யால்இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர் தொல் வினைகள் ஒல்க உயர் வான்உலகம் ஏறல் எளிதே.
வெய்யவினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டல் உறுவீர்,
மைகொள் விரி கானல் மது வார்கழனி மாகறல் உளான் எழில் அது ஆர்
கையகரி கால் வரையில் மேலது உரிதோல் உடையமேனி அழகு ஆர்
ஐயன்அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே.
தூசு துகில் நீள்கொடிகள் மேமொடு தோய்வன பொன் மாடமிசையே
மாசுபடு செய்கை மிக மாதவர்கள் ஓதிமலி மாகறல் உளான்
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகுஆர்
பூசுபொடி ஈசன் என ஏத்தவினை நிற்றல் இல, போகும் உடனே.
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண்
பாய வரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
காலின் நல பைங்கழல்கள் நீள்முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான்
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய்
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே.
கடைகொள் நெடு மாடம் மிக ஓங்குகமழ் வீதி மலி காழியவர் கோன்,
அடையும் வகை யால், பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால்,
மடைகொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே.