நிலவும், புனலும், நிறை வாள்அரவும்,இலகும் சடையார்க்கு இடம்ஆம்—எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் விலகும் கடல் ஆர் வேணுபுரமே.
அரவு ஆர் கரவன்(ன்), அமை ஆர் திரள்தோள் குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்—
கரவாத கொடைக்கு அலந்தார்அவர்க்கு விரவுஆக வல்லார் வேணுபுரமே.
ஆகம்(ம்) அழகுஆயவள்தான் வெருவ, நாகம்(ம்) உரி போர்த்தவன் நண்ணும் இடம்—
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் மேகம் தவழும் வேணுபுரமே.
காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து ஈசர்க்கு இடம்ஆவது—இன்நறவ
வாசக்கமலத்து அனம், வன் திரைகள் வீச, துயிலும் வேணுபுரமே.
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை உரையா உகந்தான் உறையும் இடம்ஆம்—
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.
ஒளிரும் பிறையும்(ம்) உறு கூவிள இன் தளிரும் சடைமேல் உடையான் இடம்ஆம்—
நளிரும் புனலின் நல செங்கயல் கண்-மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.
ஏவும் படை வேந்தன் இராவணனை, ஆ என்று அலற, அடர்த்தான் இடம்ஆம்—
தாவும் மறிமானொடு தண்மதியம் மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.
கண்ணன், கடிமாமலரில்-திகழும் அண்ணல்(ல்), இருவர் அறியா இறை ஊர்—
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள் விண்ணில்-திகழும் வேணுபுரமே.
போகம்(ம்) அறியார், துவர் போர்த்து உழல்வார், ஆகம்(ம்) அறியா அடியார் இறை ஊர்—
மூகம்(ம்) அறிவார், கலை முத்தமிழ் நூல் மீ கம் அறிவார், வேணுபுரமே.
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல் புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.
பூதத்தின்படையினீர்! பூங்கொன்றைத்தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து,
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்!—வேணுபுரம் பதிஆகக் கொண்டீரே.
சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம், தோல்-
உடை ஆடைஅது, கொண்டீர்! உமையாளை ஒருபாகம்
அடையாளம்அது கொண்டீர்! அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர்!—வேணுபுரம் பதிஆகக் கொண்டீரே.
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்!
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்!
மங்கை ஓர்கூறு உடையீர்!—மறையோர்கள் நிறைந்து ஏத்த,
பங்கயன் சேர் வேணுபுரம் பதிஆகக் கொண்டீரே.
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதிஆகக் கலந்தீரே.
ஆலை சேர் தண்கழனி அழகுஆக நறவு உண்டு,
சோலை சேர் வண்டுஇனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதிஆகக் கொண்டீரே.
மணி மல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர்!
துணி மல்கு கோவணத்தீர்! சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்!—
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச, வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயில்ஆக அமர்ந்தீரே.
நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன்தனைச் செற்றீர்!—
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.
திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென்இலங்கையர்கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரைதன்னின்
கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதிஆம் திசைமுகன், மால்,—
போய் ஓங்கி இழிந்தாரும்—போற்ற(அ)ரிய திருவடியீர்!
பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு,
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே.
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்,—
புலைஆனார்—அறஉரையைப் போற்றாது, உன் பொன்அடியே
நிலைஆகப் பேணி, நீ சரண்! என்றார்தமை, என்றும்
விலைஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.