பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
தனைக் கணி மா மலர் கொண்டு தாள் தொழுவார்அவர்தங்கள்
வினைப்பகைஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்; நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே.
சடை அமர் கொன்றையினாரும், சாந்தவெண்நீறு அணிந்தாரும்,
புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்,
விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூஇலைச்சூலப்-
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம்எல்லாம் தொழுது ஏத்த,
கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை,
பறை, வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார்அவர்தங்கள்
ஆகம் உறைவுஇடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்,
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்,
வடிவு உடை மங்கைதன்னோடு மணம் படு கொள்கையினாரும்,
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும்,
தேன்அமரும்மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரைமேல்
பால்நலநீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
புரந்தரன்தன்னொடு வானோர், போற்றி! என்று ஏத்த நின்றாரும்,
பெருந்திறல் வாள் அரக்க(ன்)னைப் பேர் இடர் செய்து உகந்தாரும்,
கருந்திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்திப்
பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடுமுடியாரே.
திருமகள்காதலினானும், திகழ்தரு மா மலர்மேலைப்
பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர்அழல் ஆகிய பெம்மான்
மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரிமாடே
பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே.
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழிஅல்லால்
மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம்பலபலவற்றால்
சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு,
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே.
கலம் மல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலைஏந்தி பாண்டிக்கொடுமுடிதன்னைச்
சொல மல்கு பாடல்கள்பத்தும் சொல்ல வல்லார், துயர் தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர்தாமே.