வேதநாயகன்; வேதியர்நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர்நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன்—புண்ணியமூர்த்தியே.
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம்செய நின்ற நல்சோதியே?
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.
வாதுசெய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர்ஆகிலும், ஏழைகாள்!
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மாதேவன்(ன்)அலால் தேவர் மற்று இல்லையே.
கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன்சிவன் பெருந்தன்மையே.
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர் முடி தன் அடிச்
சாய்வனை,—சலவார்கள்—தமக்கு உடல்
சீவனை, சிவனை, சிந்தியார்களே.
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம்அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம்அது ஆகுவர், நாடரே.
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன்ஆவான் அரன்உரு அல்லனோ?
இருக்குநால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார்—
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர்—
கருத்து இலாக் கயவக்கணத்தோர்களே.