காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!
கோட்டூர்க் கொழுந்தே! அழுத்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!
மா(ட்)டு ஊர் அறவா!—மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய்! குழகா! குற்றாலா!
மங்குல்-திரிவாய்! வானோர்தலைவா! வாய்மூர் மணவாளா!
சங்கக்குழை ஆர் செவியா! அழகா! அவியா! அனல் ஏந்திக்
கங்குல் புறங்காட்டுஆடீ!—அடியார் கவலை களையாயே!
நிறைக் காட்டானே! நெஞ்சகத்தானே! நின்றியூரானே!
மிறை(க்) காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே!
மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே!
இறை(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான்தம்மானே!
ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே!
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே!
பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே!
பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாரூர் அம்மானே!
மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே!
அருகல் பிணி நின் அடியார்மேல அகல அருளாயே!
கருகல்குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே!
பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே!
தாம் கூர் பிணி நின் அடியார்மேல அகல அருளாயே—
வேங்கூர் உறைவாய்! விளமர்நகராய்! விடை ஆர் கொடியானே!
நாங்கூர் உறைவாய்! தேங்கூர்நகராய்! நல்லூர் நம்பானே!
பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்!
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே!
ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே!—
ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே-
துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா!
பரு(த்)திநியமத்து உறைவாய்! வெயில்ஆய், பலஆய், காற்றுஆனாய்;
திருத்தித்திருத்தி வந்து, என் சிந்தை இடம்கொள் கயிலாயா!
அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா!
பொலி சேர் புரம்மூன்று எரியச் செற்ற புரிபுன்சடையானே!
வலி சேர் அரக்கன் தடக்கைஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடி!
கலி சேர் புறவில் கடவூர்ஆளீ! காண அருளாயே!
கைம்மாஉரிவை அம்மான் காக்கும் பலஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச்சிங்கடி-
தம்மான்—ஊரன், சடையன்சிறுவன், அடியன்—தமிழ்மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.