மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெ(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன்; கிளர் புனல் காவிரி
வட்டவாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
ஓவு நாள்,உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
காவு நாள் இவை என்றுஅலால் கருதேன், கிளர் புனல்காவிரிப்
பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக்கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
எல்லை இல் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என் பொன் மாமணி,
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரிஅதன்வாய்க் கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்—கறையூரில் பாண்டிக்கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும்நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல்! என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல்அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
ஏடு வானஇ இளந்திங்கள் சூடினை; என், பின்? கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்புஅது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக்கொடுமுடி
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
விரும்பி நின் மலர்ப்பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டனன்;
நெருங்கி வண்பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரிக்கோட்டுஇடை
குரும்பைமென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்கோட்டிடை—
கொம்பின்மேல் குயில் கூவ, மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தைதம்பிரான், என் பொன், மாமணி என்று
பேர் எண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன், பிரமன், தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
கோணிய பிறை சூடியை, கறையூரில் பாண்டிக்கொடுமுடி
பேணிய பெருமானை, பிஞ்ஞகப்பித்தனை, பிறப்புஇ(ல்)லியை,
பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத்தாரனை, படப்பாம்பு அரை-
நாணனை, தொண்டன்ஊரன் சொல்இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.