Home

Parasivam_AS

 

1 கண்நுதலும் கண்டக் கறையும் கரந்து அருளி
மண் இடையில் மாக்கள் மலம் அகற்றும் வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்று ஒரு கால் மேவுவரால் வேறுஇன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்.

 

2 கண்அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்டதேவ
காரா கிரகக் கலக கலி ஆழ் வேனை நின்
பேரா இன்பத்து இருந்திய பெரும!
வினவல் ஆனாது உடையேன். எனது உளம்

நீங்கா நிலைமை ஊங்கும் உளையால்
அறிவின்மை மலம் பிரிவு இன்மை  எனின்
ஒராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்
திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்.
சுத்தன் அமலன் சோதி நாயகன்

முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா
வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்
பேறும் இன்றாகும் எமக்குளம் பெரும!
இருநீலம் தீகிரி  இயமானன் கால் எனும்
பெருநிலைத் தாண்டவம்  பெருமாற்கு இலாதலின்

வேறோ உடனோ விளம்பல் வேண்டு
சீறி அறுளல் சிறுமை உடையத்தால்
அறியாது கூறினை அபக்குவ பக்குவக்
குறிபார்த்தும் அருளினம் குருமுதலாய் எனின்
அபக்குவம் அருளினும் அறியேன்  மிகத்தரும்

பக்குவம் வேண்டில் பயன்இலை நின்னால்
பக்குவம் அதனால் பயன்நீ வரினே
நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ
தன் ஒப் பார்இலி என்பதும் தகுமே
மும்மலம் சடம் அணு மூப்பு  இளமையில் நீ

நின் மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ !
உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே
இணை இலி ஆயினை என்பதை அறியேன்
யானே நீக்கினும் தானே நீங்கினும்
கோனே வேண்டா கூறல் வேண்டும்

காண்பார் யார் கொல் காட்டாக் கால்  எனும்
மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்
ஆட்பால் அவர்க்கு அருள்  என்பதை அறியே.

 

3) அறிவு அறியாமை இரண்டும் அடியேன்
செறிதலான் மெய்கண்ட தேவே! அறிவோ
அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து
குறிமாறு கொள்ளாமற் கூறு.

 

4 கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கில் விகற்பம் கற்பம்
குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை
விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை
அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம்

பைசால சூனியம் மாச்சரியம் பயம்
ஆயஏழ் குணனும் மாயைக்கு அருளினை
இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த
அறுவகைக் குணனும் கருமத்து அருளினை

ஆங்கு அவை தாமும் நீங்காது நின்று
தம்வழிச் செலுத்தித் தானே தானாய்
என்வழி என்பது ஒன்று  இன்றாம் ,மன்ன!
ஊரும் பேரும் உருவும் கொண்டு என்
ஊரும் பேரும் உருவும் கெடுத்த

பெண்ணை சூழ்ந்த வெண்ணெய் அம் பதியில்
சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய!
மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம
மாறுகோள் கூறல் போலும் தேறும்
சடம் செயல் அதனைச் சார்ந்திடும் எனினே.

கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும்
ஊன்திரள் போன்றது ஆயில் தோன்றி
அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும்
பன்மை இன்று ஆகும் எம்மை வந்து அணையத்
தானோ மாட்டாது யானோ செய்கிலன்

நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு
இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப்
பந்தம் வந்தவாறு இங்கு
அந்தம் ஆதி இல்லாய் ! அருளே.

 

5 அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று
இருள் கொண்டவாறு என் கொல் எந்தாய் மருள் கொண்ட
மாலையாய் வெண்ணெய்வாழ் மன்னவா! என்னுடைய
மால்ஐயா மாற்ற மதி.

 

6 மதி நுதல் பாகன் ஆகிக் கதிதர
வெண்ணெய்த் தோன்றி நண்ணிஉள் புகுந்து என்
உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி
காட்டி என் காட்டினை எனினும் நாட்டி என்
உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல்

பாதாள சத்தி பரியந்தம் ஆக
ஓதி உணர்ந்த யானே ஏக
முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும்
புலன் கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி
ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப்

போக்கு வரவு புரிந்தனன் தூக்கி
எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும்
சொல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும்
ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும்
இல்லது இலதாய் உள்ளது உளது எனும்

சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச்
சிறுத்தலும் பெருத்தலும் இலவே  நிறுத்தி
யானை எறும்பின் ஆனது போல் எனில்
ஞானம் அன்று அவைகாய வாழ்க்கை
மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று

விட்ட குறையின் அறிந்து தொன்று
தொட்டு வந்தன என வேண்டும் நட்ட
பெரியதில் பெருமையும் சிறியதில்  சிறுமையும்
உரியது நினக்கே உண்மை, பெரியோய்!
எனக்கு இன்று ஆகும் என்றும்
மனக்குஇனி யாய் ! இனி மற்று அது மொழியே.

 

7 மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு
ஒழிந்தன நான்கும் உணர இழிந்து அறிந்து
எறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே!
தேறிற்று என் கொண்டு தெரித்து.

 

9 கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே!
உடலகத்து மூலத்து ஒடுங்கச் சடலக்
கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பது தான் என்னை
மருவியாது என்று உரைக்க மன்.

 

10மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனை எனினே முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக நின்னோடு
ஒருவுதல் இன்றி உடந்தையே ஆகும்

பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும்
மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில்
அம்மலத்திரிவும் செம்மலர்த் தாள் நிழல்
சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப்
பெயர்வுஇலன் ஆகும் பெரும! தீர்வு இன்று

அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது
சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த
மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும்
மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின்
உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று

நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல்
இல்என மொழிந்த தொல் அறம் தனக்கும்
ஏயாது ஆகும் நாயேன் உளத்து
நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ
பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ

ஒன்றினை உரைத்து அருள்  மன்ற குன்றாப்
பெண்ணைப் புனல் வயல் வெண்ணெய்க்கு அதிபதி
கைகண் தலையாய் கால்செவி மூக்குஉயர்
மெய்கொண்டு என் வினை வேர் அறப் பறித்த
மெய்கண்ட தேவ வினையிலி!
மைகொண்ட கண்ட ! வழுவில் என் மதியே!

 

11 மதிநின்பால் இந்த மலத்தின் பால்நிற்க
விதிஎன்கொல் வெண்ணெய் வாழ்மெய்ய! பதிநின்பால்
வந்தால் இதில் வரத்தில் வந்து இரண்டும் பற்றுகிலேன்
எந்தாய் இரண்டும் ஆம் ஆறு என்.

 

12 எண் திசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும்
மேதினி உதய மெய்கண்ட தேவ!
கோதுஇல் அமுத ! குணப் பெருங்குன்ற!
என்னின் ஆர்தலும் அகறலும் என்னை கொல்

உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம்
என்னும் அதுவே நின் இயல்பு எனினே
வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும்
உண்டு எனப் படுவை எண்தோள் முக்கண்
யாங்கணும் பிரியாது ஒங்குநின் நிலையின்

யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின்
ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும்
இன்றிச் சாயைக்கு நன்று மன் இயல்பே
அனையை ஆகுவை நினைவு அரும் காலை

இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி
நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நீயேல்
அருள்மாறு ஆகும், பெரும ! அஃது அன்றியும்
நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும்
சொற்பெறும் அஃது இத் தொல் உலகு இல்லை
அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வு அறச்
சொல்லில் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே!

 

13 இறந்தோய் கரணங்கள் எல்லாம் எனக்குச்
சிறந்தோய் எனினும் மெய்த்தேவே! பிறந்து உடனாம்
காயம் கொளவும் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத்து அற்று

 

14 அற்றது என் பாசம் உற்றது உன் கழலே
அருள் துறை உறையும் பொருள் சுவைநாத!
வேறு என்று இருந்த என்னை யான் பெற
வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ!
இருவினை என்பது என்னைகொல் அருளிய

மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை ஆயில்
கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா
காரணம் சடம் அதன் காரியம் அஃதால்
ஆர் அணங்கு ஆம்வழி அடியேற்கு என்னைகொல்

செயல் எனது ஆயினும் செயலே வராது
இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும்
பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச்
செய்திக்கு உள்ளசெயல் அவை அருத்தின்
மையல்நீர் இயமற்கு வழக்கு இல்லை மன்ன!

ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு
இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை
நின்னது கருணைசொல் அளவு இன்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம்
உள்ளது போகாது இல்லது வராது

உள்ளதே உள்ளது எனும் உரை அதனால்
கொள்ளும் வகையில் கொளுத்திடும் ஆயின்
வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும்
ஈயவேண்டும் எனும்விதி இன்றாம்
ஆயினும் என்னை அரும்துயர்ப் படுத்தல்

நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமும் கரும பந்தமும்
தெருள அருளும் சிவபெரு மானே!

 

15 மான் அமரும் செங்கை மதில் வெண்ணெய் வாழ்மன்ன!
போனவினை தானே பொருந்துமோ  யான் அதனில்
ஆவனோ ஆக்காய் அமலனாம் நின் அருள்தான்
தேவனே! யாதுக்கோ தேர்.

 

16 தேராது உரைப்பன் தெருமரல் உளத்தொடு
பேராது அருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்பது என் உண்மை எனில்
நின்னது நேர்மை சொல்மனத்து இன்றே
எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும்

யெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி
நீக்கி என்றனைப் போக்கு அறநிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பு அது நிற்க
வாக்கும் மனமும் போக்கு உளதனுவும்

சொல்லும் நினைவும் செய்யும் செயலும்
நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து
முறைபிற ழாமல் குறைவு நிறைவு இன்றாய்க்
காலமும் தேசமும் மால் அற வகுத்து
நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே

சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே
சாலார் செயலே மால் ஆகுவதே
அத்துவா மெத்தி அடங்கா வினைகளும்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும்

ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால்
கருமம் அருத்தும் கடன் அது அன்றாம்
தருமம் புரத்தல் பெருமையது அன்றே
கண்ணினுள் மணியே! கருத்தினுள் கருத்த!
வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ!

இடர்படு குரம்பையுள் இருத்திந்
துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே.

 

17 சொல் தொமும்பு கொள்ள நீ சூழ்ந்ததுவும் நின்செயல்கள்
மற்றவர்கள் நின் நோக்கில் மாய்ந்த உயிர்க் குற்றம்
ஒளித்தி யாங்கு ஐய! உயர் வெண்ணெய் நல்லூர்க்
குளித்தமதுக் கொன்றை எம்கோ!

 

18 கோலம் கொண்ட ஆறுஉண ராதே
ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து
ஓடாப் பூட்கை நாடி நாடா
என்னுள் கரந்து என் பின்வந்து அருளி

என்னையும் தன்னையும் அறிவின்று இயற்றி
என்னது யான் எனும் அகந்தையும் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணும் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
மிக்க போகம் விதியால் விளைத்திட்டு

என்பணி ஆளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்குஎன ஆடல் பார்த்திட்டு
என் வழி நின்றனன் எந்தை அன்னோ
அருள் மிக உடைமையில் அருள்துறை வந்து
பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும்

கைகண்டு கொள்ளெனக் கடல்உலகு அறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீ இத்
தன்னுள் கரந்து தான்முன் ஆகித்
தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித்
தன்னையும் என்னையும் தந்து தனது

செய்யா மையும் என்செயல் இன்மையும்
எம்மான் காட்டி எய்தல்
அம்மா எனக்கே அதிசயம்தருமே.

 

19 தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக்
கருமா கடல் விடம் உண் கண்டப் பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உரு என்ன வந்து எடுத்தான் உற்று.

 

20. உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும்
அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன்
அந்தம் ஆதி இல்லவன் வத்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு

இருள் வெளி ஆகும் மருளினை அறுத்து
வந்து புகுதலும் சென்று நீங்கலும்
இன்றி ஒன்றாய் நின்ற அந் நிலையில்
ஒன்று ஆகாமல் இரண்டா காமல்
ஒன்றும் இரண்டும் இன்றா காமல்

தன்னது பெருமை தாக்கான் ஆயினும்
என்னது பெருமை எல்லாம் எய்தித்
தன்னை எனக்குத் தருவதை அன்றியும்
என்னையும் எனக்கே தந்து தன்னது
பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள்

ஆரா இன்பம் அளித்துத் தீரா
உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற
வள்ளன்மை காட்டி மலர் அடி அருளிய
மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை
வெண்ணெய் காவலன் மெய் கண்ட தேவன்.

அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய
மலம்முத லாயின மாய்க்கும்
உலக உயிர்க்கு எல்லாம் ஒரு கண்ணே.

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s