2:90 திருநெல்வாயில் அரத்துறை

1

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தைசெய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்—
கந்தமாமலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

ஈர வார்சடைதன்மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்—
வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்—
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண்நீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்—
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி,
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்—
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

உரவுநீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்—
குரவமாமலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

நீலமாமணிமிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்—
கோல மா மலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

செழுந் தண் மால்வரை எடுத்த செரு வலி இராவணன் அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான்—
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

நுணங்குநூல் அயன் மாலும் இருவரும் நோக்க(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது அன்றால்—
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
அணங்கும் சோலை நெல்வாயில்அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும்
பாக்கியப்படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்—
பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம்(ம்) அருளே.

கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்தம்(ம்) அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர்தம் வினை போய்ப்
பறையும்;ஐயுறவு இல்லை, பாட்டு இவைபத்தும் வல்லார்க்கே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: