துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சுஅகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று!—அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சுஎழுத்துமே.
மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன—
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சுஎழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்-
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்-
ஆன கெடுப்பன—அஞ்சுஎழுத்துமே.
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன—அஞ்சுஎழுத்துமே.
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம்உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்தபோழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்தபோழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும்போழ்தினும்,
அம்மையினும், துணை—அஞ்சுஎழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன—அஞ்சுஎழுத்துமே.
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன—அஞ்சுஎழுத்துமே.
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன—அஞ்சுஎழுத்துமே.
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன—அஞ்சுஎழுத்துமே.
நல்-தமிழ் ஞானசம்பந்தன்—நால்மறை
கற்றவன், காழியர்மன்னன்—உன்னிய
அற்றம் இல் மாலைஈர்-ஐந்தும், அஞ்சுஎழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.