1:6 திருமருகல்

1அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கங்குல் விளக்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

நெய் தவழ் மூஎரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செய் தவ நால்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

தோலொடு நூல்-இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேல் புல்கு தண்வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கால் புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால்மறையோர் வழிபாடு செய்ய,
மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
தே மரு பூம்பொழில்-சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

பாடல் முழவும் விழவும் ஓவாப் பல்மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேடகம் மா மலர்ச்சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
காடுஅகமே இடம்ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

புனைஅழல் ஓம்பு கை அந்தணாளர் பொன்அடி நாள்தொறும் போற்றுஇசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சினை கெழு தண்வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கனை வளர் கூர் ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன்நெடுந்தோள் வரையால் அடர்ந்து,
மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேண் தங்கு மா மலர்ச்சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவுஅணையானும், அறிவு அரிய,
மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவிஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
கந்தம் அகில்புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?

இலை மருதே அழகுஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர்அல்லார் தொழும் மா மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடிஅதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்
சூலம்வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லைஆமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: