7:38 திருவதிகை வீரட்டானம்

1தம்மானை அறியாத சாதியார் உளரே?
சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல்
உடையானை, விடையானை,—கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்—
எம்மானை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-
தொழிந்து என்கொல்? மறவாத சிந்தையால் வாழ்வேன்;
பொன்னே! நல்மணியே! வெண்முத்தே! செய் பவளக்-
குன்றமே! ஈசன்! என்று உன்னையே புகழ்வேன்;
அன்னே! என் அத்தா! என்று அமரரால் அமரப்-
படுவானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னே! என் எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே!
விண்ணணவர்தம் பெருமானே! மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே! என் கட்டி! என்று உள்ளத்தால் உள்கி,
காதல் சேர் மாதராள்—கங்கையாள்நங்கை—
வரும் புனலும் சடைக்கு அணிந்து, வளராத பிறையும்
வரிஅரவும் உடன்துயில் வைத்துஅருளும் எந்தை,
இரும் புனல் வந்து எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை,
நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை,
காற்றானை, தீயானை, கடலானை, மலையின்
தலையானை, கடுங் கலுழிக் கங்கைநீர்வெள்ள
ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்-
தம்மானை, யாவர்க்கும் அறிவு அரிய செங்கண்
ஏற்றானை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

சேந்தர்தாய்—மலைமங்கை—திருநிறமும் பரிவும்
உடையானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
கூந்தல் தாழ் புனல்மங்கை—குயில் அன்ன மொழியாள்—
கடைஇடையில் கயல்இனங்கள் குதிகொள்ளக் குலாவி,—
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி,
மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி—
ஏந்து நீர் எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

மைம் மான மணிநீலகண்டத்து எம்பெருமான்,
வல் ஏனக்கொம்பு அணிந்த மா தவனை, வானோர்-
தம்மானை, தலைமகனை, தண்மதியும் பாம்பும்
தடுமாறும் சடையானை, தாழ்வரைக்கை வென்ற
வெம் மான மதகரியின் உரியானை, வேத-
விதியானை, வெண்நீறு சண்ணித்த மேனி
எம்மானை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

வெய்துஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிக இரங்கி, அருள்புரிந்து, வீடுபேறு ஆக்கம்
பெய்தானை, பிஞ்ஞகனை, மைஞ் ஞவிலும் கண்டத்து
எண்தோள் எம்பெருமானை, பெண்பாகம் ஒருபால்
செய்தானை, செக்கர்வான் ஒளியானை, தீ வாய்
அரவு ஆடு சடையானை, திரிபுரங்கள் வேவ
எய்தானை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

பொன்னானை, மயில்ஊர்தி முருகவேள் தாதை,
பொடிஆடு திருமேனி, நெடுமால்தன் முடிமேல்-
தென்னானை, குடபாலின் வடபாலின் குணபால்
சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள்தம் பெருமானை, கருமான்-
உரியானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னானை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

திருந்தாத வாள் அவுணர் புரம்மூன்றும் வேவச்
சிலை வளைவித்து, ஒரு கணையால்-தொழில் பூண்ட சிவனை,
கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய
கண்மூன்றும் உடையானை,—கருதாத அரக்கன்
பெருந்தோள்கள்நால்-ஐந்தும், ஈர்-ஐந்துமுடியும்,
உடையானைப் பேய்உருவம் ஊன்றும்-உற மலைமேல்
இருந்தானை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

எம்பினையே கலன்ஆக அணிந்தானை, எங்கள்
எருது ஏறும் பெருமானை, இசைஞானிசிறுவன்—
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்க்கோன்,
வன்தொண்டன், ஆரூரன்—மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவு அரிய அத்தர்-
பெருமானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என் பொன்னை, எறி கெடில வடவீரட்டானத்து
உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே!

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: