1:1 சீர்காழி

1

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

முற்றல்ஆமை இள நாகமொடு ஏனமுளைக்கொம்பு அவை பூண்டு,
வற்றல்ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

நீர் பரந்த நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாவெண்மதி சூடி,
ஊர் பரந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்
ஊன் பரந்த உலகின் முதல்ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலைஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம், மலர்க்கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்) இவன்! என்ன
அருமைஆக உரைசெய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம்(ம்) இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர்ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடுஉயர்சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

சடை முயங்கு புனலன்(ன்), அனலன்(ன்), எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்
துயர் இலங்கும்(ம்) உலகில் பலஊழிகள் தோன்றும்பொழுதுஎல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரையானும்,
நீணுதல் செய்து ஒழிய(ந்) நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்
வாள்நுதல் செய் மகளீர் முதல்ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல்செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

புத்தரொடு பொறி இல் சமணும் புறம்கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மத்தயானை மறுக(வ்), உரி போர்த்தது ஒர்மாயம்(ம்)இது! என்ன,
பித்தர்போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான்இவன்தன்னை,
ஒரு நெறிய மனம்வைத்து உணர் ஞானசம்பந்தன்(ன்) உரைசெய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிது ஆமே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: