பூ ஆர் கொன்றைப் புரிபுன்சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம்மூன்று அட்டார்அவர்போல்ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.
எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலைகொடு சேர் காழியார்,
வெந்தநீற்றர், விமலர்அவர்போல்ஆம்
அந்தி நட்டம்ஆடும் அடிகளே.
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர்போல்ஆம்
ஆனஇன்பம்ஆடும் அடிகளே.
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார்அவர்போல்ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர்அவர்போல்ஆம்
ஏடார் புரம்மூன்று எரித்த இறைவரே.
கொங்கு செருத்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர்போல்ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்தும் நடந்தார்அவர்போல்ஆம்
பல்லஇடத்தும் பயிலும் பரமரே.
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர்போல்ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர்போல்ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.
பெருக்கப் பிதற்றும் சமணர்சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர்அவர்போல்ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.