அந்தமும் ஆதியும்ஆகிய அண்ணல் ஆர்அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்தவெண்நீறு மெய் பூசும் வேட்கள நன்நகராரே.
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்கவெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும்ஆறு இவர்போல்வார்
உடைதனில் நால்விரல்கோவணஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை-
விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்நகராரே.
பூதமும் பல்கணமும் புடைசூழ, பூமியும் விண்ணும் உடன்பொருந்த,
சீதமும் வெம்மையும்ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சுழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன்நகராரே.
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஒர் ஆமை வாங்கி அணிந்தவர்தாம்
திரை புல்கு தெண்கடல் தண்கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்நகராரே.
பண் உறு வண்டு அறை கொன்றைஅலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண்திங்கள்கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண்நிற மால்விடை அண்ணல் வேட்கள நன்நகராரே.
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்
பொறி வளர் ஆர்அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,
மறி வளர் அம் கையர், மங்கை ஒர்பங்கர், மைஞ்ஞிறமான்உரி-தோல்உடை ஆடை
வெறி வளர் கொன்றைஅம்தாரார் வேட்கள நன்நகராரே.
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலைவேந்தன்மகள் மகிழ,
நுண்பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண்தலைஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டு ஆர்அமுதம் அமரர்க்கு அருளி,
சூழ்தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.
திருஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசைமேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில்-தோள்கள் ஆழத்து அழுந்த
வெருஉற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்நகராரே.
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவதுஅல்லால் புறன்உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண்முறுவல்(ல்) உமை அஞ்ச, மூரி-வல் ஆனையின் ஈர்உரி போர்த்த
வித்தகர், வேதமுதல்வர் வேட்கள நன்நகராரே.
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின்நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம்மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.