கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்-
புள்ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.
தையலாள் ஒருபாகம், சடைமேலாள்அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும் இடம்
மெய் சொல்லா இராவணனை மேல்ஓடி ஈடு அழித்து,
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே.
வாசநலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ,
ஈசன், எம்பெருமானார், இனிதுஆக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும் ஒழியாமே,
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே.
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடைஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரிஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.
கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடிஆகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம்ஆக,
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே.
திறம் கொண்ட அடியார்மேல்-தீவினைநோய் வாராமே,
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே.
அத்தியின்ஈர்உரி மூடி, அழகுஆக அனல் ஏந்தி,
பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து,
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே.
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடிஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடிவாணாள்அது உடையானைப்
புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.
வேதித்தார் புரம்மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச்
சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம்
ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிதுஆய் உறையும் இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று, இராமற்காப்
புடைத்து அவனைப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.
செடிஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து ஆவான்,
பொடிஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லைஆம், மறுபிறப்பே.