அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் நம்பு ஆலிக்கும்ஆறு கண்டு, இன்புஉற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர்,
சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்,
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!
அரிச்சுஉற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர்,
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சுஉற்றுப் பல பேசப்படாமுனம்,
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என் செயும்?
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லைஇல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்
நான் நிலாவி இருப்பன், என் நாதனை;
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும்
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்துஉறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான், செறு காலனே.
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார், இளையார், விடம் உண்ட எம்
அருத்தனார், அடியாரை அறிவரே.
விண் நிறைந்தது ஓர் வெவ்அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்
துள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில்மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும், திரிந்தும், காண வல்லாரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து-
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்,
சதுரன், சிற்றம்பலவன், திருமலை,
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!