வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம்தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!—என் செய்வான் தோன்றினேனே!
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர்தங்களோடும்
உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்;
பெற்றிலேன்; பெருந்தடங்கண் பேதையார்தமக்கும் பொல்லேன்;
எற்றுஉளேன்? இறைவனே!—நான் என் செய்வான் தோன்றினேனே!
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணரமாட்டேன்;
மூட்டி, நான், முன்னைநாளே முதல்வனை வணங்கமாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்றுஅதுஆம் பாவம்தன்னை
ஈட்டினேன்; களையமாட்டேன்—என் செய்வான் தோன்றினேனே!
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே,
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு இடைந்து உருகுகின்றேன்—என் செய்வான் தோன்றினேனே!
செம்மை வெண்நீறு பூசும் சிவன்அவன், தேவதேவன்,
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன்—என் செய்வான் தோன்றினேனே!
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமேபேசக்
கூச்சுஇலேன்; ஆதலாலே கொடுமையை விடும்ஆறு ஓரேன்;
நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன்—
ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே!
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்தன்னை,
பூசனை, புனிதன்தன்னை, புணரும் புண்டரிகத்தானை,
நேசனை, நெருப்பன்தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறியமாட்டேன்—என் செய்வான் தோன்றினேனே!
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண்மயிர் விரவி, மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம்
திளைக்கின்ற முடியினான்தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன், இருமி ஊன்றி;—என் செய்வான் தோன்றினேனே!
விளைவு அறிவு இலாமையாலே வேதனைக்குழியில் ஆழ்ந்து,
களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும்இல்லேன்!
தளை அவிழ் கோதை நல்லார்தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன்; எந்தாய்!—என் செய்வான் தோன்றினேனே!
வெட்டனவு உடையன்ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்டமாமூர்த்திஆய ஆதியை ஓதி நாளும்
எள்-தனை எட்டமாட்டேன்—என் செய்வான் தோன்றினேனே!