7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…

1

பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாரேதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன,
உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!

இடை அறியேன்; தலை அறியேன்; எம்பெருமான், சரணம்! என்பேன்;
நடை உடையன், நம் அடியான் என்று அவற்றைப் பாராதே,
விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்-
உடை உடையான், எனை உடையான், உளோம்; போகீர்! என்றானே!

செய் வினை ஒன்று அறியாதேன்; திருவடியே சரண் என்று
பொய்அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ?
பைஅரவா! இங்கு இருந்தாயோ? என்ன, பரிந்து என்னை
உய்ய அருள்செய்ய வல்லான், உளோம்; போகீர்! என்றானே!

கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி;
செம்பவளத்திருஉருவன்; சேயிழையோடு உடன்ஆகி,
நம்பி இங்கே இருந்தீரே! என்று நான் கேட்டலுமே,
உம்பர்தனித்துணை எனக்கு, உளோம்; போகீர்! என்றானே!

பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து இலங்க,
மின்இலங்கு நுண்இடையாள் பாகமா, எருது ஏறி,
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த, அடியேனும்
உன்னதம்ஆய்க் கேட்டலுமே, உளோம்; போகீர்! என்றானே!

கண்நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர்,
தெண்நிலவு, செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்;
கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ? என்ன,
ஒண்நுதலி பெருமானார், உளோம்; போகீர்! என்றானே!

பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்யத்
தார் நிலவு நறுங்கொன்றைச் சடையனார்; தாங்க(அ)ரிய
கார் நிலவு மணிமிடற்றீர்! இங்கு இருந்தீரே? என்ன,
ஊர்அரவம் அரைக்கு அசைத்தான், உளோம்; போகீர்! என்றானே!

வார் இடம் கொள் வனமுலையாள்தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள்பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி,
கார் இடம்கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி-
யூர் இடம்கொண்டு இருந்த பிரான், உளோம்; போகீர்! என்றானே!

பொன்நவிலும் கொன்றையினாய்! போய் மகிழ்க்கீழ் இரு! என்று
சொன்ன எனைக் காணாமே, சூளுறவு மகிழ்க்கீழே
என்ன வல்ல பெருமானே! இங்கு இருந்தாயோ? என்ன,
ஒன்னலரைக் கண்டால் போல், உளோம்; போகீர்! என்றானே!

மான்திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள்எல்லாம்
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க, உலகம்எலாம்
ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ? என்ன,
ஊன்றுவது ஓர் கோல் அருளி, உளோம்; போகீர்! என்றானே!

ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட
கார் ஆரும் மிடற்றானைக் காதலித்திட்டு, அன்பினொடும்
சீர் ஆரும் திரு ஆரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா, வல்வினைதானே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: