2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே!

1நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து அழகுஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
சால நீள் தலம்அதன்இடைப் புகழ் மிகத் தாங்குவர், பாங்காலே.

பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவுஅல்குல்,
மங்கைமார்பலர் மயில், குயில், கிளி, என மிழற்றிய மொழியார், மென்-
கொங்கையார்குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர்ஆகி, சங்கரன் திருஅருள் பெறல் எளிது ஆமே.

நம்பனார், நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்தமக்கு எல்லாம்;
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர், செல்வம் மல்கிய நல்ல
கொம்பு அனார், தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே.

பலவும் நீள் பொழில்-தீம்கனி தேன்பலா, மாங்கனி, பயில்வு ஆய—
கலவமஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகுஆய,
குலவு நீள் வயல் கயல் உகள்—கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தர் ஆகி, நீள் நிலத்துஇடை நீடிய புகழாரே.

உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும் அன்பர்ஆம் அடியார்கள்
பருகும் ஆர்அமுது! என நின்று, பரிவொடு பத்தி செய்து, எத்திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய்; அவன் அருள் பெறல் ஆமே.

துன்று வார்சடைத் தூமதி, மத்தமும், துன் எருக்கு, ஆர் வன்னி,
பொன்றினார் தலை, கலனொடு, பரிகலம், புலிஉரிஉடை ஆடை,
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை; கேடு இலை; ஏதம் வந்து அடையாவே.

மாட மாளிகை, கோபுரம், கூடங்கள், மணி அரங்கு, அணி சாலை,
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம், பரிசொடு பயில்வுஆய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
கேடுஅது ஒன்று இலர்ஆகி, நல் உலகினில் கெழுவுவர், புகழாலே.

ஒளி கொள் வாள்எயிற்று அரக்கன் அவ் உயர்வரை எடுத்தலும், உமை அஞ்சி,
சுளிய ஊன்றலும், சோர்ந்திட, வாளொடு நாள் அவற்கு அருள்செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினைத் தொழுவார்கள்,
தளிர் கொள் தாமரைப்பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே.

பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை, பவளத்தை,
தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை, தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
நீடு செல்வத்தர்ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே.

கோணல்வெண்பிறைச் சடையனை, கோட்டூர் நற்கொழுந்தினை, செழுந்திரளை,
பூணல்செய்து அடி போற்றுமின்! பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும்
காணல் ஒன்று இலாக் கார்அமண், தேரர்குண்டுஆக்கர், சொல் கருதாதே,
பேணல்செய்து, அரனைத் தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.

பந்து உலா விரல் பவளமாய்த் தேன்மொழிப்பாவையோடு உரு ஆரும்
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை, செழும் பவளம்
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த
சந்து உலாம் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர், புகழாலே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: