6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்!

1

கண் தலம் சேர் நெற்றி இளங்காளைகண்டாய்;
கல்மதில் சூழ் கந்தமாதனத்தான்கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்துகண்டாய்;
மதில் கச்சி ஏகம்பம் மேயான்கண்டாய்;
விண்தலம் சேர் விளக்குஒளிஆய் நின்றான்கண்டாய்;
மீயச்சூர் பிரியாத விகிர்தன்கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

வண்டு ஆடு பூங்குழலாள் பாகன்கண்டாய்;
மறைக்காட்டு உறையும் மணாளன்கண்டாய்;
பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான்கண்டாய்;
பரலோக நெறி காட்டும் பரமன்கண்டாய்;
செண்டுஆடி அவுணர்புரம் செற்றான்கண்டாய்;
திரு ஆரூர்த் திருமூலட்டானன்கண்டாய்;
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

அலை ஆர்ந்த புனல்கங்ஐகச் சடையான்கண்டாய்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான்கண்டாய்;
மலை ஆர்ந்த மடமங்கை பங்கன்கண்டாய்;
வானோர்கள் முடிக்கு அணிஆய் நின்றான்கண்டாய்;
இலை ஆர்ந்த திரிசூலப்படையான்கண்டாய்;
ஏழ்உலகும்ஆய் நின்ற எந்தைகண்டாய்;
கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான்கண்டாய்;
மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான்கண்டாய்;
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன்கண்டாய்;
பூந்துருத்திப் பொய்இலியாய் நின்றான்கண்டாய்;
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான்கண்டாய்;
ஐயாறு அகலாத ஐயன்கண்டாய்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன்கண்டாய்;
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான்கண்டாய்;
போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான்கண்டாய்;
புகலூரை அகலாத புனிதன்கண்டாய்;
நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான்கண்டாய்;
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான்கண்டாய்;
கூர் ஆர்ந்த மூஇலைவேல்படையான்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான்கண்டாய்;
கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான்கண்டாய்;
படி மலிந்த பல்பிறவி அறுப்பான்கண்டாய்;
பற்றுஅற்றார் பற்றவனாய் நின்றான்கண்டாய்;
அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான்கண்டாய்;
அமரர்கணம் தொழுது ஏத்தும் அம்மான்கண்டாய்;
கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

உழை ஆடு கரதலம்ஒன்று உடையான்கண்டாய்;
ஒற்றியூர் ஒற்றியா உடையான்கண்டாய்;
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான்கண்டாய்;
காளத்திக் கற்பகம்ஆய் நின்றான்கண்டாய்;
இழை ஆடும் எண்புயத்த இறைவன்கண்டாய்;
என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான்கண்டாய்;
குழை ஆட நடம்ஆடும் கூத்தன்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான்கண்டாய்;
பராய்த்துறையும் பாசூரும் மேயான்கண்டாய்;
நடம்ஆடி ஏழ்உலகும் திரிவான்கண்டாய்;
நால்மறையின் பொருள்கண்டாய்; நாதன்கண்டாய்;
கடம் ஆடு களிறு உரித்த கண்டன்கண்டாய்;
கயிலாயம் மேவி இருந்தான்கண்டாய்;
குடம்ஆடி இடம்ஆகக் கொண்டான்கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: