ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா;
அடியவர்கட்கு அன்பன்காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான்காண்; புரிசடைமேல் புனல் ஏற்றான்காண்;
புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான்காண்;
காத்தான்காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம்,
கனைகடல்வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே
சேர்ந்தான்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
கருத்தன்காண்; கமலத்தோன் தலையில் ஒன்றைக்
காய்ந்தான்காண்; பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண்; உமையவள் ஓர்பாகத்தான்காண்;
ஓர் உருவின் மூஉருஆய், ஒன்றுஆய், நின்ற
விருத்தன்காண்; விண்ணவர்க்கும் மேல்ஆனான்காண்;
மெய்அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண்—திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
நம்பன்காண், நரைவிடை ஒன்று ஏறினான்காண்,
நாதன்காண், கீதத்தை நவிற்றினான்காண்;
இன்பன்காண், இமையா முக்கண்ணினான்காண்,
ஏகற்று மனம் உருகும் அடியார்தங்கட்கு
அன்பன்காண், ஆர் அழல்அது ஆடினான்காண்,
அவன், இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்
செம்பொன்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
மூவன்காண்; மூவர்க்கும் முதல் ஆனான்காண்;
முன்னும்ஆய், பின்னும்ஆய், முடிவு ஆனான்காண்;
காவன்காண்; உலகுக்கு ஓர் கண் ஆனான்காண்;
கங்காளன்காண்; கயிலைமலையினான்காண்;
ஆவன்காண்; ஆஅகத்துஅஞ்சுஆடினான்காண்;
ஆர்அழல்ஆய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணாத்
தேவன்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
கானவன்காண், கானவனாய்ப் பொருதான் தான்காண்,
கனல்ஆட வல்லான்காண், கையில் ஏந்தும்
மானவன்காண், மறைநான்கும் ஆயினான்காண்,
வல் ஏறுஒன்றுஅது ஏற வல்லான் தான்காண்,
ஊனவன்காண், உலகத்துக்கு உயிர் ஆனான்காண்,
உரை அவன்காண், உணர்வு அவன்காண், உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
உற்றவன்காண், உறவுஎல்லாம் ஆவான் தான்காண்,
ஒழிவு அற நின்ற எங்கும் உலப்புஇலான்காண்,
புற்று அரவே ஆடையும்ஆய்ப் பூணும் ஆகிப்
புறங்காட்டில் எரிஆடல் புரிந்தான் தான்காண்,
நல்-தவன்காண், அடி அடைந்த மாணிக்குஆக
நணுகியது ஓர் பெருங் கூற்றைச் சேவடியினால்
செற்றவன்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
உதைத்தவன்காண், உணராத தக்கன் வேள்வி
உருண்டு ஓட; தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன்காண்; தக்கன்தன் தலையைச் செற்ற
தலையவன்காண்; மலைமகள்ஆம் உமையைச் சால
மதிப்பு ஒழிந்த வல்அமரர் மாண்டார் வேள்வி
வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
உரிந்த உடையார் துவரால் உடம்மை மூடி
உழிதரும் அவ் ஊமர்அவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்டம்எல்லாம்
பறித்து, உடனேநிரந்து வரு பாய் நீர்ப்பெண்ணை,
நிரந்து வரும் இருகரையும் தடவா ஓடி,
நின்மலனை வலம்கொண்டு, நீள நோக்கி,
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.
அறுத்தவன்காண், அடியவர்கள் அல்லல்எல்லாம்;
அரும்பொருள்ஆய் நின்றவன்காண்; அநங்கன் ஆகம்
மறுத்தவன்காண்; மலைதன்னை மதியாது ஓடி,
மலைமகள்தன் மனம் நடுங்க, வானோர் அஞ்ச,
கறுத்தவனாய், கயிலாயம் எடுத்தோன் கையும்
கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச்
செறுத்தவன்காண் திரு முண்டீச்சுரத்து மேய
சிவலோகன்காண்; அவன் என் சிந்தையானே.