திருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்

11. பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும் 	
 திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் 	
 முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும் 	
 அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர் 	

 2. நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் 	
 சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர் 
 ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச் 	
 சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம் 	

 3. நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் 	
 தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக் 	
 கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப் 	
 புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை 	

 4. பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின் 	
 தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த 	
 வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின் 	
 நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும் 	

 5. வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும் 	
 வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம் 	
 புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய் 	
 அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர் 	

 6. மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் 	
 சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப் 	
 பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப் 	
 புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி 	

 7. கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் 	
 வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ் 	
 கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட 	
 ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி 	

 8. வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் 	
 தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல் 	
 மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும் 	
 புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும் 	

 9. செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக் 	
 குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை 	
 வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் 	
 நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும் 	

 10. புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும் 	
 தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது 	
 விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் 	
 கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும் 	

 11. இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் 	
 மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் 	
 அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் 	
 ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் 	

12. பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால் 	
 சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் 	
 மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த 	
 அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் 	

 13.  ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு 	
 சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் 	
 கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும் 	
 பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் 	

 14. போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை 	
 நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் 	
 சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு 	
 ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் 	

 15. இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும் 	
 செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று 	
 மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் 	
 அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் 	

 16. திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து 	
 விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே 	
 அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் 	
 வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார் 	

 17. சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில் 	
 நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் 	
 கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு 	
 போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார் 	

 18. சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று 	
 பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து 	
 சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல் 	
 அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார் 	

 19. வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால் 	
 தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான் 	
 இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து 	
 நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார் 	

 20. இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி 	
 மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த 	
 சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச 	
 உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப 	

 21. அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த 	
 ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை 	
 என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார் 	
 நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார் 	

 22.  நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது 	
 பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய் 	
 பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய் 	
 வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார் 	

 23. செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து 	
 பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் 	
 மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு 	
 அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் 	

 24. நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் 	
 சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார் 	
 குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள் 	
 ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள் 	

 25. இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி 	
 அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல் 	
 ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே 	
 செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார் 	

 26. இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய 	
 அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி 	
 மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது 	
 எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார் 	

 27. இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் 	
 அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி 	
 மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு 	
 முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார் 	

 28. இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி 	
 முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து 	
 அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க 	
 மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் 	

 29. தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் 	
 அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி 	
 எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித் 	
 தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார் 	

 30.  ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் 	
 வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப 	
 நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார் 	
 தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார் 	

 31. மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப் 	
 பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் 	
 நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி 	
 இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார் 	

 32. கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார் 	
 எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப் 	
 பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய் 	
 மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் 	

 33. செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த 	
 அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் 	
 வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் 	
 பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 	

 34. திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் 	
 பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார் 	
 அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க 	
 வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர் 	

 35. தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி 	
 ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி 	
 ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் 	
 எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால் 	

 36. அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார் 	
 வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து 	
 சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க 	
 அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார் 	

 37. மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து 	
 ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார் 	
 தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவிளைப் 	
 பாசம் உற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: