கண்ணப்பநாயனார் [திண்ணன்] புராணம்

1

650. மேவலர் புரங்கள் செற்ற   விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை  சூழ்ந்தபொத் தப்பி நாடு.

651. இத்திரு நாடு தன்னில் இவர்திருப் பதியா தென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர்
மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலி கோலி
ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும்.

652. குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கு மெங்கும்.

653. வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆட லன்றி
அன்புறு காதல் கூர அணையுமான் பிணைக ளோடும்
இன்புற மருவி யாடும் எயிற்றியர் மகளி ரெங்கும்.

654. வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்எறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசை யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்பும் சிறுகண்ஆ குளியுங் கூடிக்
கல்லெனு மொலியின் மேலும் கறங்கிசை யருவி யெங்கும்.

655. ஆறலைத் துண்ணும் வேடர் அயற்புலங் கவர்ந்து கொண்ட
வேறுபல் உருவின் மிக்கு விரவும்ஆன் நிரைக ளன்றி
ஏறுடை வானந் தன்னில் இடிக்குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கைமா நிரைக ளெங்கும்.

656. மைச்செறிந் தனைய மேனி வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்க் கதிபதி நாக னென்பான்.

657. பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின் மிக்கான்  வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை யென்பாள்.

658. அரும்பெறல் மறவர் தாயத் தான்றதொல் குடியில் வந்தாள்
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவு கோத்துப்
பெரும்புறம் அலையப் பூண்டாள்  பீலியுங் குழையுந் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூரரிப் பிணவு போல்வாள்.

659. பொருவருஞ் சிறப்பின் மிக்கார் இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே
அரியதென் றெவருங் கூற அதற்படு காத லாலே
முருகலர் அலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்.

660. வாரணச் சேவ லோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை.

661. பயில்வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்த ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளி னாலே.

662. கானவர் குலம்வி ளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட் டோடும்
ஆனஅத் திங்கள் செல்ல அளவில்செய் தவத்தி னாலே
பான்மதி உவரி ஈன்றால் எனமகப் பயந்த போது.

663. கரிப்பரு மருப்பின் முத்தும் கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே யன்றி
வரிச்சுரும் பலைய வானின் மலர்மழை பொழிந்த தெங்கும்
அரிக்குறுந் துடியே யன்றி அமரர்துந் துபியும் ஆர்த்த.

664. அருவரைக் குறவர் தங்கள் அகன்குடிச் சீறூ ராயம்
பெருவிழா எடுத்து மிக்க பெருங்களி கூருங் காலைக்
கருவரை காள மேகம் ஏந்திய தென்னத் தாதை
பொருவரைத் தோள்க ளாரப் புதல்வனை யெடுத்துக் கொண்டான்.

665. கருங்கதிர் விரிக்கு மேனிக்  காமரு குழவி தானும்
இரும்புலிப் பறழின் ஓங்கி  இறவுள ரளவே யன்றி
அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவுஞ் சாற்றுந் தன்மையில் பொலிந்து தோன்ற.

666. அண்ணலைக் கையில் ஏந்தற் கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத் திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள் கலன்பல வணிந்தா ரன்றே.

667. வரையுறை கடவுட் காப்பும் மறக்குடி மரபில் தங்கள்
புரையில்தொல் முறைமைக் கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்.

668. வருமுறைப் பருவந் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க் கெல்லாம்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையிற் புதல்வர்ப் பெற்ற ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.

669. ஆண்டெதிர் அணைந்து செல்ல இடும்அடித் தளர்வு நீங்கிப்
பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவுமுள் அரிந்து கோத்த
நாண்தரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க.

670. பாசொளி மணியோ டார்த்த பன்மணிச் சதங்கை ஏங்கக்
காசொடு தொடுத்த காப்புக் கலன்புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலங் காட்டி மறுகிடை யாடும் நாளில்.

671. தண்மலர் அலங்கல் தாதை தாய்மனங் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்.

672. பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கை நீட்டப்
பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண் டோச்ச
இருசுடர்க் குறுகண் தீர்க்கும் எழில்வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய்முத்தங் கொள்ள மாற்றி.

673. துடிக்குற டுருட்டி யோடித் தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப்
பிடித்தறுத் தெயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
அடிச்சிறு தளிராற் சிந்தி அருகுறு சிறுவ ரோடும்
குடிச்சிறு குரம்பை யெங்கும் குறுநடைக் குறும்பு செய்து.

674. அனையன பலவும் செய்தே ஐந்தின்மே லான ஆண்டில்
வனைதரு வடிவார் கண்ணி மறச்சிறு மைந்த ரோடும்
சினைமலர்க் காவு ளாடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனைமருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி.

675. கடுமுயற் பறழி னோடும் கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய் கொடுஞ்செவிச் சாப மான
முடுகிய விசையி லோடித் தொடர்ந்துடன் பற்றி முற்றத்
திடுமரத் தாளிற் கட்டி வளர்ப்பன எண்ணி லாத.

676. அலர்பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையு மாட்டிக்
குலமுது குறத்தி யூட்டிக் கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப் புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை யாண்டு செல்லச் சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்.

677. தந்தையும் மைந்த னாரை நோக்கித்தன் தடித்த தோளால்
சிந்தையுள் மகிழப் புல்லிச் சிலைத்தொழில் பயிற்ற வேண்டி
முந்தையத் துறையின் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்.

678. வேடர்தங் கோமான் நாகன் வென்றிவேள் அருளாற் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத்  திண்ணன்விற் பிடிக்கின் றான்என்
றாடியல் துடியுஞ் சாற்றி யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளும் மறக்குலத் தலைவ ரெல்லாம்.

679. மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும்  பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் பலங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார்.

680. மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா ரெங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க்கடன் பலவும் நேர்ந்து
வில்விழா எடுக்க வென்று விளம்பினன் வேடர் கோமான்.

681. பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார்.

682. சிலையினைக் காப்புக் கட்டும் திண்புலி நரம்பிற் செய்த
நலமிகு காப்பு நன்னாள் நாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின் கோலமுன் கையிற் சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம் வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.

683. ஐவன அடிசில் வெவ்வே றமைத்தன புற்பாற் சொன்றி
மொய்வரைத் தினைமென் சோறு மூங்கில்வன் பதங்கள் மற்றும்
கைவினை எயின ராக்கிக் கலந்தவூன் கிழங்கு துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்கும் கலந்தனர் சினவில் வேடர்.

684. செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்தஊன் அயில்வார் வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடும் மிசைவார் வெவ்வே
றந்தமி லுணவின் மேலோர் ஆயினர் அளவி லார்கள்.

685. அயல்வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி யிருப்பின் உள்ளார்
இயல்வகை உணவி லார்ந்த எயிற்றியர் எயின ரெல்லாம்
உயர்கதி ருச்சி நீங்க ஒழிவில்பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்.

686. பாசிலைப் படலை சுற்றிப் பன்மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத்தோல் கட்டிக் கவடிமெய்க் கலன்கள் பூண்டு
மாசில்சீர் வெட்சி முன்னா வருந்துறைக் கண்ணி சூடி
ஆசில்ஆ சிரியன் ஏந்தும் அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.

687. தொண்டக முரசும் கொம்பும் துடிகளுந் துளைகொள் வேயும்
எண்திசை நிறைந்து விம்ம எழுந்தபே ரொலியி னோடும்
திண்திறல் மறவ ரார்ப்புச் சேண்விசும் பிடித்துச் செல்லக்
கொண்டசீர் விழவு பொங்கக் குறிச்சியை வலங்கொண் டார்கள்.

688. குன்றவர் களிகொண் டாடக் கொடிச்சியர் துணங்கை யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடும் சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும் விருப்புடை ஏழாம் நாளின்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்றை.

689. வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க  மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கள்தொல் மரபின் விஞ்சைத் தனுத்தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித் தார்கள்.

690. பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன்முன் செய்த
விற்றொழிற் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றைநாள் தொடங்கி நாளும் அடற்சிலை யாண்மை முற்றக்
கற்றன ரென்னை யாளும் கானவர்க் கரிய சிங்கம்.

691. வண்ணவெம் சிலையு மற்றப் படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக் கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி எய்தினார் எல்லை யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்.

692. இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.

693. அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.

694. சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.

695. இத்தனைகா லமும்நினது சிலைக்கீழ்த் தங்கி
இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் இன்னும்
அத்தநின தருள்வழியே நிற்ப தல்லால்
அடுத்தநெறி வேறுளதோ அதுவே யன்றி
மெய்த்தவிறல் திண்ணனைஉன் மரபில் சால
மேம்படவே பெற்றளித்தாய் விளங்கு மேன்மை
வைத்தசிலை மைந்தனைஈண் டழைத்து நுங்கள்
வரையாட்சி யருளென்றார் மகிழ்ந்து வேடர்.

696. சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும்
திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி
தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி
நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.

697. கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பின் அரிந்த குழை காதிற் பெய்து
மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு
மயிற் கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப்
பூநெருங்கு தோரைமல சேடை நல்கிப்
போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.

698. நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி
நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும்
நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி
நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.

699. கோட்டமில்என் குலமைந்தன் திண்ணன் எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும்
வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து
வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டென்றான் கவலை யில்லான்.

700. மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே உன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி
மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.

701. தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு
திண்ணனார் சிலைத்தாதை அழைப்பச்சீர்கொள்
மைவிரவு நறுங்குஞ்சி வாசக கண்ணி
மணிநீல மலையொன்று வந்த தென்னக்
கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து
காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில்
செவ்வரைபோல் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச்
செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர வைத்தான்.

702. முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்
மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென்
றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.

703. தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.

704. நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும்
எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.

705. செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும்
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப
புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.

706. நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.

707. முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.

708. கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு
துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.

709. மார்பிற்சிறு தந்த மணித்திரள் மாலை தாழத்
தாரிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச்
சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக்
கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி.

710. அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.

711. வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.

712. அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.

713. பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி
வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.

714. மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்
பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்
தேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள
கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.

715.  நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.

716. அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை யாட்டி தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர் செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண் டெழுந்து போந்தார்.

717. தாளில்வாழ் செருப்பர்தோல் தழைத்தநீடு தானையார்
வாளியோடு சாபம்மேவு கையர்வெய்ய வன்கணார்
ஆளியேறு போலஏகும் அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம்  மிக்குமேல் எழுந்ததே.

718. வன்தொடர்ப்பி ணித்தபாசம் வன்கைமள்ளர் கொள்ளவே
வென்றிமங்கை வேடர்வில்லின மீதுமேவு பாதமுன்
சென்றுநீளு மாறுபோல்வ செய்யநாவின் வாயவாய்
ஒன்றொடொன்று நேர்படாமல் ஓடுநாய்கள் மாடெலாம்.

719. போர்வலைச் சிலைத்தொழிற் புறத்திலே விளைப்பவச்
சார்வலைத் தொ டக்கறுக்க ஏகும்ஐயர் தம்முனே
கார்வலைப் படுத்தகுன்று கானமா வளைக்கநீள்
வார்வலைத் திறஞ்சுமந்து வந்தவெற்பர் முந்தினார்.

720. நண்ணிமாம றைக்குலங்கள் நாடவென்று நீடுமத்
தண்ணிலா அடம்புகொன்றை தங்குவேணி யார்தமைக்
கண்ணினீடு பார்வையொன்று கொண்டு காணும் அன்பர்முன்
எண்ணில்பார்வை கொண்டுவேடர் எம்மருங்கும் ஏகினார்.

721. கோடுமுன் பொலிக்கவும் குறுங்கணா குளிக்குலம்
மாடுசென் றிசைப்பவும் மருங்குபம்பை கொட்டவும்
சேடுகொண்ட கைவிளிச் சிறந்தவோசை செல்லவும்
காடுகொண் டெழுந்தவேடு கைவளைந்து சென்றதே.

722. நெருங்குபைந் தருக்குலங்கள் நீடுகாடு கூடநேர்
வருங்கருஞ் சிலைத்தடக்கை மானவேடர் சேனைதான்
பொருந்தடந் திரைக்கடல் பரப்பிடைப் புகும்பெருங்
கருந்தரங்க நீள்புனல் களிந்திகன்னி யொத்ததே.

723. தென்றிசைப் பொருப்புடன் செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள் ஆதியான பல்குலம்
துன்றிநின்ற வென்றடிச் சுவட்டின்ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடெம் மருங்கும் வேடரோடினார்.

724. ஒடியெறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பெலாம்
நெடியதிண் வலைத்தொடக்கு நீளிடைப் பிணித்துநேர்
கடிகொ ளப் பரந்தகாடு காவல்செய் தமைத்தபின்
செடிதலைச் சிலைக்கைவேடர் திண்ணனார்முன் நண்ணினார்.

725. வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடிமுன்
மஞ்சலைக்கு மாமலைச் சரிப்புறத்து வந்தமா
அஞ்சுவித் தடர்க்குநாய்கள் அட்டமாக விட்டுநீள்
செஞ்சரத்தி னோடுசூழல் செய்தகானுள் எய்தினார்.

726. வெய்யமா எழுப்பஏவி வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள் பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா எழுப்பினார்கள் கானெலாம்.

727. ஏனமோடு மானினங்கள் எண்குதிண் கலைக்குலம்
கானமேதி யானைவெம் புலிக்கணங்கள் கான்மரை
ஆனமாவ னேகமா வெருண்டெழுந்து பாயமுன்
சேனைவேடர் மேலடர்ந்து சீறிஅம்பில் நூறினார்.

728. தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே.

729. வெங்கணைபடு பிடர்கிழிபட விசைஉருவிய கயவாய்
செங்கனல்விட அதனொடுகணை செறியமுன்இரு கருமா
அங்கெழுசிரம் உருவியபொழு தடலெயிறுற அதனைப்
பொங்கியசின மொடுகவர்வன புரைவனசில புலிகள்.

730.  பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுறுவிட முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர் குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள்.

731. கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.

732. நீளிடைவிசை மிசைகுதிகொள நெடுமுகில்தொட எழுமான்
தாளுறுகழல் மறவர்கள்விடு சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற வருமெனவிழும் உழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை கொளவுளவெதிர் பலவே.

733. கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய பயில்புதல்வன மதன்மேல்
அடலுறுசரம் உடலுறவரை அடியிடம்அல மரலால்
மிடைகருமரை கரடிகளொடு விழுவனவன மேதி.

734. பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலையற நுழைமா
உலமொடுபடர் வனதகையுற உறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளின்அள வுளவே.

735. துடியடியன மடிசெவியன  துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள் மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு கொலைபுரிசிலை மறவோர்.

736. இவ்வகைவரு கொலைமறவினை எதிர்நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை கானெழுவதொர் ஏனம்
பெய்கருமுகி லெனஇடியொடு பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை அறநிமிர்வுற முடுகியகடு விசையில்.

737. போமதுதனை அடுதிறலொடு பொருமறவர்கள் அரியே
றாமவர்தொடர் வுறும்விசையுடன் அடிவழிசெலும் அளவில்
தாமொருவரு ம் அறிகிலரவர் தனிதொடர்வுழி அதன்மேல்
ஏமுனையடு சிலைவிடலைகள் இருவர்கள்அடி பிரியார்.

738. நாடியகழல் வயவர்களவர் நாணனும்நெடு வரிவில்
காடனும்எனும் இருவருமலை காவலரொடு கடிதில்
கூடினர்விடு பகழிகளொடு கொலைஞமலிகள் வழுவி
நீடியசரி படர்வதுதரு நீழலின்விரை கேழல்.

739. குன்றியைநிகர் முன்செறஎரி கொடுவிழிஇடி குரல்நீள்
பன்றியும்அடல் வன்றிறலொடு படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை சுலவியநெறி சூழல்
சென்றதனிடை நின்றதுவலி தெருமரமரம் நிரையில்.

740. அத்தருவளர் சுழலிடையடை அதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை முனைபெறஎதிர் உருவிக்
குத்தினருடல் முறிபடவெறி குலமறவர்கள் தலைவர்.

741. வேடர்தங் கரிய செங்கண் வில்லியார் விசையிற் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன்பின் இன்று காதங்கள் பலவந் தெய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்றவர் அடியில் தாழ்ந்தார்.

742. மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும் தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார்.

743. என்றவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றுமிவ் வனத்தி லுள்ள தென்றுரை செய்ய நாணன்
நின்றவிப் பெரிய தேக்கின் அப்புறஞ் சென்றால் நீண்ட
குன்றினுக் கயலே ஓடும் குளிர்ந்தபொன் முகலி என்றான்.

744. பொங்கிய சினவில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையிற் கண்டார்
செங்கண்ஏ றுடையார் வைகும் திருமலைச் சாரற் சோலை.

745. நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர்கும் பிடலாம் என்றான்.

746. ஆவதென் இதனைக் கண்டிங் கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும் ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே போகென்றார் திண்ண னார்தாம்.

747. உரைசெய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரைவளர் கழையின் முத்தும் காரகில் குறடுஞ் சந்தும்
வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள்முன் திரட்டி வைத்த திருமுக லியினைச் சார்ந்தார்.

748. ஆங்கதன் கரையின் பாங்கோர் அணிநிழற் கேழ லிட்டு
வாங்குவிற் காடன் தன்னை மரக்கடை தீக்கோல் பண்ணி
ஈங்குநீ நெருப்புக் காண்பாய்  இம்மலை யேறிக் கண்டு
நாங்கள்வந் தணைவோ மென்று நாணனும் தாமும் போந்தார்.

749. அளிமிடை கரைசூழ் சோலை அலர்கள்கொண் டணைந்த ஆற்றின்
தெளிபுன லிழிந்து சிந்தை தெளிவுறுந் திண்ண னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக்  காளத்தி கண்டு கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.

750. கதிரவ னுச்சி நண்ணக் கடவுள்மால் வரையி னுச்சி
அதிர்தரு மோசை ஐந்தும் ஆர்கலி முழக்கங் காட்ட
இதுவென்கொல் நாணா வென்றார்க் கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கெழும் ஒலிகொல் என்றான்.

751. முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்ப மான
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்புநெக் குருகி உள்ளத் தெழுபெரு வேட்கை யோடும்.

752.  நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத் தாமும்
பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்.

753. திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவம் ஆனார்.

754. மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள
எகநா யகரைக் கண்டார் எழுந்தபே ருவகை அன்பின்
வேகமா னதுமேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு
மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்.

755. நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கண்ணீர் அருவி பாய
அடியனேற் கிவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற.

756. வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதி யார்போல்
கைம்மலை கரடி வேங்கை அரிதிரி கானந் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரு மின்றிக் கெட்டேன்
இம்மலைத் தனியே நீரிங் கிருப்பதே என்று நைந்தார்.

757. கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள இந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்.

758. வன்திறல் உந்தை யோடு மாவேட்டை யாடிப் பண்டிக்
குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்தநீ ரிவரை யாட்டி
ஒன்றிய இலைப்பூச் சூட்டி ஊட்ளறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன்செய்தா னாகு மென்றான்.

759. உண்ணிறைந் தெழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்கா ளத்தி நாயனார்க் கினிய செய்கை
எண்ணிய இவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண்டவ்
அண்ணலைப் பிரிய மாட்டா தளவில் ஆதரவு நீட.

760. இவர்தமைக் கண்டே னுக்குத் தனியராய் இருந்தார் என்னே
இவர்தமக் கமுது செய்ய இறைச்சியும் இடுவா ரில்லை
இவர்தமைப் பிரிய ஒண்ணா தென்செய்கேன் இனியான் சால
இவர்தமக் கிறைச்சி கொண்டிங் கெய்தவும் வேண்டு மென்று.

761. போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர்  கன்றகல் புனிற்றாப் போல்வர்
நாதனே அமுது செய்ய  நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவே னென்பார்.

762. ஆர்தம ராக நீரிங் கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப் போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போந்தார்.

763. முன்புநின் றரிதில் நீங்கி மொய்வரை யிழிந்து நாணன்
பின்புவந் தணைய முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கி
அன்புகொண் டுய்ப்பச் செல்லும் அவர்திரு முகலி ஆற்றின்
பொன்புனை கரையி லேறிப் புதுமலர்க் காவிற் புக்கார்.

764. காடனும் எதிரே சென்று தொழுதுதீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை யெல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்துநாம் போகைக் கின்று
நீடநீர் தாழ்த்த தென்னோ என்றலும் நின்ற நாணன்.

765. அங்கிவன் மலையில் தேவர் தம்மைக்கண் டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான்
இங்குமத் தேவர் தின்ன இறைச்சிகொண் டேகப் போந்தான்
நங்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க் கென்றான்.

766. என்செய்தாய் திண்ணா நீதான் என்னமால் கொண்டாய் எங்கள்
முன்பெரு முதலி யல்லை யோவென முகத்தை நோக்கார்
வன்பெரும் பன்றி தன்னை  எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வே றம்பினால் ஈர்ந்து கொண்டு.

767. கோலினிற் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகிலை யிணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவா ரானார்.

768. மருங்குநின் றவர்கள் பின்னும் மயல்மிக முதிர்ந்தான் என்னே
அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கிவே றுமிழா நின்றான்
பெரும்பசி யுடைய னேனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும்பரி சுணரான் மற்றைத்  தசைபுறத் தெறியா நின்றான்.

769. தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல்
ஆவதொன் றறியோந் தேவ ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க வேண்டும்அவ் வேட்டைக் கானில்
ஏவலாட் களையுங் கொண்டு போதுமென் றெண்ணிப் போனார்.

770. கானவர் போன தோரார் கடிதினில் கல்லை யின்கண்
ஊனமு தமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார்.

771. தனுவொரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனிதமெல் லிறைச்சி நல்ல போனகம் ஒருகை யேந்தி
இனியஎம் பிரானார் சாலப் பசிப்பரென் றிரங்கி யேங்கி
நனிவிரைந் திறைவர் வெற்பை நண்ணினார் திண்ண னார்தாம்.

772. இளைத்தனர் நாய னார்என் றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்.

773. தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி
மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
இலைமிசைப் படைத்த ஊனின் திருவமு தெதிரே வைத்து.

774. கொழுவிய தசைக ளெல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங்
கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற்
பழகிய இனிமை பார்த்துப் படைத்தஇவ் விறைச்சி சால
அழகிது நாய னீரே அமுதுசெய் தருளும் என்றார்.

775. அன்னவிம் மொழிகள் சொல்லி அமுதுசெய் வித்த வேடர்
மன்னனார் திருக்கா ளத்தி மலையினார்க் கினிய நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னும் எழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.

776. அவ்வழி யந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை யென்ன ஐயர் மருங்குநின் றகலா நின்றார்.

777. சார்வருந் தவங்கள் செய்தும் முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிருள் நீங்க நின்றார்.

778. கழைசொரி தரளக் குன்றில் கதிர்நில வொருபாற் பொங்க
முழையர வுமிழ்ந்த செய்ய மணிவெயில் ஒருபால் மொய்ப்பத்
தழைகதிர்ப் பரிதியோடும சந்திரன் தலைஉ வாவில்
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்.

779. விரவுபன் மணிகள் கான்ற விரிசுடர்ப் படலை பொங்க
மரகதம் ஒளிகொள் நீல மணிகளும் இமைக்குஞ் சோதி
பொரவிரு சுடருக் கஞ்சிப் போயின புடைகள் தோறும்
இரவிரு ளொதுங்கி னாலே போன்றுள தெங்கும் எங்கும்.

780. செந்தழல் ஒளியில் பொங்கும் தீபமா மரங்க ளாலும்
மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும்
ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார் அரும்பெருஞ் சோதி யாலும்
எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் றில்லை.

781. வருங்கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற கண்துயி லாத வீரர்
அரும்பெறல் தம்பி ரானார்க் கமுதுகொண் டணைய வேண்டி.

782. ஏறுகாற் பன்றி யோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை வினைத்தொழில் விரகி னாலே
ஊறுசெய் காலம் சிந்தித்  துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்.

783. மொய்காட்டும் இருள்வாங்கி முகங்காட்டுந் தேர்இரவி
மெய்காட்டும் அன்புடைய வில்லியார் தனிவேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்டகருந் திரையெடுத்துக்
கைகாட்டு வான்போலக் கதிர்காட்டி யெழும்பொழுதில்.

784. எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய முனிவர்சிவ கோசரியார்.

785. வந்துதிரு மலையின்கண் வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும் செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும் கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன் யார்செய்தார் என்றழிவார்.

786. மேவநேர் வரஅஞ்சா வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம் புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி அழுதுவிழுந் தலமந்தார்.

787. பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின் பூசனையும் தாழ்க்கநான்
இருப்பதினி என்என்றவ் இறைச்சியெலும் புடன்இலையும்
செருப்படியும் நாயடியும் திருவலகால் மாற்றியபின்
விருப்பினொடுந் திருமுகலிப் புனல்மூழ்கி விரைந்தணைந்தார்.

788. பழுதுபுகுந் ததுதீரப் பவித்திரமாம் செயல்புரிந்து
தொழுதுபெறு வனகொண்டு தூயபூ சனைதொடங்கி
வழுவில்திரு மஞ்சனமே முதலாக வரும்பூசை
முழுதுமுறை மையின்முடித்து முதல்வனார் கழல்பணிந்தார்.

789. பணிந்தெழுந்து தனிமுதலாம் பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.

790. இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன் தீவினையின் திறம்ஒழிவேன்.

791. திருமலையின் புறம்போன திண்ணனார் செறிதுறுகல்
பெருமலைக ளிடைச்சரிவில் பெரும்பன்றி புனம்மேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை ஒளிநின்று கொன்றருளி.

792. பயில்விளியால் கலையழைத்துப் பாடுபெற ஊடுருவும்
அயில்முகவெங் கணைபோக்கி அடியொற்றி மரையினங்கள்
துயிலிடையிற் கிடையெய்து தொடர்ந்துகட மைகளெய்து
வெயில்படுவெங் கதிர்முதிரத் தனிவேட்டை வினைமுடித்தார்.

793. பட்டவன விலங்கெல்லாம் படர்வனத்தில் ஒருசூழல்
இட்டருகு தீக்கடைகோல் இருஞ்சுரிகை தனையுருவி
வெட்டிநறுங் கோல்தேனும் மிகமுறித்துத் தேக்கிலையால்
வட்டமுறு பெருங்கல்லை  மருங்குபுடை படவமைத்தார்.

794. இந்தனத்தை முறித்தடுக்கி எரிகடையும் அரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள்
கொந்திஅயில் அலகம்பாற் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவன வக்குவித்து.

795. வாயம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்தவற்றின்
ஆயவுறுப் பிறைச்சியெலாம் அரிந்தொருகல் லையிலிட்டுக்
காயநெடுங் கோல்கோத்துக் கனலின்கண் உறக்காய்ச்சித்
தூயதிரு அமுதமைக்ககச் சுவைகாணல் உறுகின்றார்.

796. எண்ணிறந்த கடவுளருக் கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணஎரி வாயின்கண் வைத்ததெனக் காளத்தி
அண்ணலார்க் காம்பரிசு தாஞ்சோதித் தமைப்பார்போல்
திண்ணனார் திருவாயில் அமைத்தார்ஊன் திருவமுது.

797. நல்லபத முறவெந்து நாவின்கண் இடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன் பிழிந்துகலந் ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித் தாமமுந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோல் உடன்கொண்டு வந்தணைந்தார்.

798. வந்துதிருக் காளத்தி மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர் தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய பூசனையின் செயல்முடிப்பார்.

799. ஊனமுது கல்லையுடன் வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள் மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது தித்திக்கும் எனமொழிந்தார்.

800. இப்பரிசு திருவமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய் தந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந் தெழும்அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்லுறங்கார் பகல்வேட்டை யாடுவார்.

801. மாமுனிவர் நாள்தோறும் வந்தணைந்து வனவேந்தர்
தாமுயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வெய்தித்
தீமையென அதுநீக்கிச் செப்பியஆ கமவிதியால்
ஆமுறையில் அருச்சனைசெய் தந்நெறியில் ஒழுகுவரால்.

802.  நாணனொடு காடனும்போய் நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும்உறக் கமுமின்றி அணங்குறைவா ளையுங்கொண்டு
பேணுமக னார்தம்பால் வந்தெல்லாம் பேதித்துக்
காணுநெறி தங்கள்குறி வாராமற் கைவிட்டார்.

803. முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ.

804. அந்நிலையில் அன்பனார் அறிந்தநெறி பூசிப்ப
மன்னியஆ கமப்படியால் மாமுனிவர் அருச்சித்திங்
கென்னுடைய நாயகனே இதுசெய்தார் தமைக்காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்தருள வேண்டுமென.

805. அன்றிரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை நாமுரைப்பக் கேள்என்று.

806. அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா றறிநீயென் றருள்செய்வார்.

807. உனக்கவன்தன் செயல்காட்ட நாளைநீ யொளித்திருந்தால்
எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழிகென்று மறைமுனிவர்க் கருள்செய்து
புனற்சடிலத் திருமுடியார் எழுந்தருளிப் போயினார்.

808. கனவுநிலை நீங்கியபின் விழித்துணர்ந்து கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர் புலர்வளவும் கண்துயிலார்
மனமுறும்அற் புதமாகி வரும்பயமும் உடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேல் தோன்றுவான் கதிர்தோன்ற.

809. முன்னைநாள் போல்வந்து திருமுகலிப் புனல்மூழ்கிப்
பன்முறையும் தம்பிரான் அருள்செய்த படிநினைந்து
மன்னுதிருக் காளத்தி மலையேறி முன்புபோல்
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்.

810. கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லி யார்தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும்இர வொழிந்த காலை
அருமறை முனிவ னார்வந் தணைவதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை யாடி.

811. மாறில்ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலுஞ் சென்னி
ஏறுநாண் மலரும் வெவ்வே றியல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க் கமுத மான செல்வனார் திருக்கா ளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுகவந் தணையா நின்றார்.

812. இத்தனை பொழுதுந் தாழ்த்தேன் எனவிரைந் தேகு வார்முன்
மொய்த்தபல் சகுன மெல்லாம் முறைமுறை தீங்கு செய்ய
இத்தகு தீய புட்கள் ஈண்டமுன் உதிரங் காட்டும்
அத்தனுக் கென்கொல் கெட்டேன் அடுத்ததென் றணையும் போதில்.

813. அண்ணலார் திருக்கா ளத்தி அடிகளார் முனிவ னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத் திருநய னத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத் தேஅவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந் தோடி வந்தார்.

814. வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங் குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.

815. விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வ
தொழிந்திடக் காணார் செய்வ தறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்துபோய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைக ளெங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்.

816. வாளியுந் தெரிந்து கொண்டிம் மலையிடை எனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தார் உளர்கொலோ விலங்கின் சாதி
ஆளிமுன் னாகி யுள்ள விளைத்தவோ அறியே னென்று
நீளிருங் குன்றச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்.

817. வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார.

818. பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க் கடுத்த தென்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க் கடுத்த தென்னோ
ஆவதொன் றறிகி லேன்யான் என்செய்கேன் என்று பின்னும்.

819. என்செய்தால் தீரு மோதான் எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய்கழல் வேட ரென்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்குமெய் மருந்து தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு வருவன்நான் என்று போனார்.

820.  நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்க ளெங்கும்
இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறென வெருக்கொண் டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதநா யகன்பால் வைத்த
மனத்தினுங் கடிது வந்து மருந்துகள் பிழிந்து வார்த்தார்.

821. மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக் கூனெனும் உரைமுன் கண்டார்.

822. இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப.

823.  நின்றசெங் குருதி கண்டார் நிலத்தினின் றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த இந்த மதியென நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பி னாலே உன்மத்தர் போல மிக்கார்.

824. வலத்திருக் கண்ணில் தங்கண் அப்பிய வள்ள லார்தம்
நலத்தினைப் பின்னும் காட்ட  நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில்செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.

825. கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன் மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை இடந்தப்பி யொழிப்பே னென்று.

826. கண்ணுதல் கண்ணில் தங்கண் இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன் திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும் ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத் தரித்திலர் தேவ தேவர்.

827. செங்கண்வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க வென்றே.

828. கானவர் பெருமா னார்தங் கண்ணிடந் தப்பும் போதும்
ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார் நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.

829. பேறினி யிதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால் பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று மன்னுபே ரருள்பு ரிந்தார்.

830. மங்குல்வாழ் திருக்கா ளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்தாள் தலைமேற் கொண்டே
கங்கைவாழ் சடையார் வாழும் கடவூரிற் கலய னாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகல லுற்றேன்.

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: