ஒன்பதாம் திருமுறை

வேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்

திருச்சிற்றம்பலம்!!!

1

205. துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !

206. தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி வழியடியேன் தொழிலிறையும்
நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !

207. பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே !

208. ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே
பேயாவித் தொழும்பனைத்தம்பிரான் இகழும் என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

209. நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன்
ஒன்றியொரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

210. படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்கு ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

211. மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகாது ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந்து அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

212. வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யில்
கூடாமே கைவந்து குறுகுமா(று) யான்உன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

213. வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத்துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

213. வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத்துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.

திருச்சிற்றம்பலம்!!!

வழமையானது
ஒன்பதாம் திருமுறை

கண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்

திருச்சிற்றம்பலம்!!!

1

195. மின்னார் உருவம் மேல் விளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்தில்லை அம்பலத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை
என்று கொல் எய்துவதே ?

196. ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்று கொலோ !

197. முத்தீ யாளர் நான்ம றையர்
மூவாயிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடும்
தென்தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ ?

198. மானைப் புரையும் மடமென் நோக்கி
மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னி மேலோர்
அம்புலி சூடும்அரன்
தேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவது என்றுகொலோ ?

199. களிவான் உலகில் கங்கை நங்கை
காதலனே ! அருளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடியார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே ! தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ?

200. பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறையோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத்(து) ஆடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக்
காண்பதும் என்றுகொலோ ?

201. இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான் எடுத்த மற்ற வற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொன் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ ?

202. வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி யாடும்
அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே.

203. நெடியா னோடு நான்மு கனும்
வானவரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால்தி ரட்டும்
அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ?

204. சீரான் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாழிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆரா இன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.

திருச்சிற்றம்பலம்!!!

வழமையானது
ஒன்பதாம் திருமுறை

பூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்

திருச்சிற்றம்பலம்!!!

1

185. முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.

186. கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி மூவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத் தாடினையே.

187. அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.

188. எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும்ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.

189. களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.

190. அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோகம் ஆவதுவும் தில்லைச்சிற் றம்பலமே.

191. களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே.

192. பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நயிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.

193. உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.

194. சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.

திருச்சிற்றம்பலம்!!!

வழமையானது
ஒன்பதாம் திருமுறை

பூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை

திருச்சிற்றம்பலம்!!!

1

183. கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே.

 

பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே.

திருச்சிற்றம்பலம்!!!

வழமையானது
ஒன்பதாம் திருமுறை

சேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்

திருச்சிற்றம்பலம்!!!

1

279. சேலுலாம் வயல் தில்லையுளீர் உமைச்
சால நாள்அயன் சார்வதி னால்இவள்
வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று
மால தாகும்என் வாணுதலே.

280. வாணு தற்கொடி மாலது வாய்மிக
நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணு தற்பொலி தில்லையு ளீர்உமை
காணில் எய்ப்பிலள் காரிகையே.

281. காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
கீரி யல்தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழலாள் இவள்விம்முமே.

282. விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனா
உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.

283. அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயவுன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே.

284. மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று)
ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்மடக் கொடியையே.

285. கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சீலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.

286. அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.

287. அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக்
கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே.

288. ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம்எய் தியிருப்பரே.

திருச்சிற்றம்பலம்!!!

 

வழமையானது
ஒன்பதாம் திருமுறை

புருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்!

திருச்சிற்றம்பலம்!!!

1

268. வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ?
தேனல்வரி வண்டறையும் தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே.

269. ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடியிமை யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.

270. ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர்அம்பால்
பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறையோவாத் தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.

271. ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே.

272. காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைச்சிற் றம்பலவர்
பூணார் வனமுலைமேல் பூஅம்பால் காமவேள்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே.

273. ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம்பலவர்
வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே.

274. ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே.

275. என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்
மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே.

276. முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர்
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.

277. நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்காத லித்தேறும் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர் !

278. ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே.

திருச்சிற்றம்பலம்!!!

வழமையானது
ஒன்பதாம் திருமுறை

புருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் !

திருச்சிற்றம்பலம்!!!

1

257. வாரணி நறுமலர் வண்டு கிண்டு
பஞ்சமம் செண்பக மாலைமாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்து வந்திலைநம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு
தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்
ஆவியின் பரம்என்றன் ஆதரவே.

258. ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட்( டு) அம்மஅம்ம
பாவிவன் மனமிது பையவேபோய்ப்
பனிமதிச் சடையான் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே
ஆவியின் வருத்தம் இதாரறிவார்
அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே !

259. அம்பலத் தருள்நடம் ஆடவேயும்
யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர்முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும்உய்யேன்
வன்பல படையுடைய பூதஞ்சூழ
வானவர் கணங்களை மாற்றியாங்கே
என்பெரும் பயலமை தீரும்வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே !

260. எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்
கொழுந்தது வாகிய கூத்தனேநின்
குழையணி காதினில் மாத்திரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கனி வாயும்என் சிந்தைவெளவ
அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ?
அரும்புனல் அலமரும் சடையினானே !

261. அரும்புனல் அலமரும் சடையி னானை
அமரர்கள் அடிபணிந்(து) அரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சில்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

262. தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
என்னுயர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலை யோ(டு) இடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடம் ஆடில் எங்கள்
ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே.

263. ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே
அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றம் சாயக்
குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா!
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே.

264. சேயிழை யார்க்கினி வாழ்வரிது
சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரம் புலியதள் இன்னுடையும்
பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு)
ஏயிவல் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈச னேயோ.

265. எங்களை ஆளுடை ஈசனையோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபுகுந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.

266. அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று
அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழிவுமையாள்
கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே?

267. ஆசையை அளவறுத் தார்இங் காரே?
அம்பலத்(து) அருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வன்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார்
மலைமகள் கணவனை அணைவர் தாமே.

திருச்சிற்றம்பலம்!!!

வழமையானது