நாவுக்கரசர்

5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்!

1

நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள் உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

கருப்புவெஞ்சிலைக்காமனைக் காய்ந்தவன்;
பொருப்புவெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன்ஆகில், எனக்கு இடர் இல்லையே.

வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன்ஐஞ்சும்ஆடுவர்;
பூக்கள்கொண்டு அவன் பொன்அடி போற்றினால்
காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.

அல்லல் இல்லை அருவினைதான் இல்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வனார், திரு வேட்களம் கைதொழ
வல்லர்ஆகில்; வழிஅது காண்மினே!

துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி
நம்பன் ஆகிய நல் மணிவேங்கடனார்,
செல்வனார், திரு வேஙகளம் கைதொழ
இன்பம், சேவடி ஏத்தி இருப்பதே.

கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ,
பட்ட வல்வினைஆயன பாறுமே.

வட்டமென்முலையாள்உமை பங்கனார்,
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,
சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம்ஆகி இரு, மடநெஞ்சமே!

நட்டம்ஆடிய நம்வனை, நாள்தொறும்
இட்டத்தால் இனிதுஆக நினைமினோ
வட்டவார்முலையாள்உமை பங்கனார்,
சிட்டனார், திரு வேட்களம்தன்னையே!

வட்ட மா மதில்மூன்று உடை வல் அரண்
சுட்ட கொள்கையார்ஆயினுமட், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர்போல்,-திருவெட்களச் செல்வரே.

சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற
வாட ஊன்றி, மலர்அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே.

வழமையானது
நாவுக்கரசர்

4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்!

1

கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம்அது;
வெய்யது வேலைநஞ்சு உண்ட விரிசடை விண்ணவர்கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை, ஆரா அமுதினை,—நாம் அடைந்து ஆடுதுமே.

கைத்தலை மான்மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்;
பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்;
செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி
அத்தனை; ஆரா அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.

முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்;
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடிஆன செய்யும்
செம்பொனை; நல் மலர்மேலவன் சேர் திரு வேதிகுடி
அன்பனை; நம்மை உடையனை;—நாம் அடைந்து ஆடுதுமே.

பத்தர்கள், நாளும் மறவார், பிறவியை ஒன்று அறுப்பான்;
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பார்இடம்முன் உயர்ந்தான்;
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி
அத்தனை; ஆரா அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.

ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார்? அவர் கை
மான் அணைந்து ஆடும்; மதியும் புனலும் சடைமுடியன்;
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி,
ஆன்அண்ஐந்துஆடும், மழுவனை;—நாம் அடைந்து ஆடுதுமே.

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய,
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார்;
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.

ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதிகுடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.

எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள்-
திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்;
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.

மை அணி கண்டன்; மறை விரி நாவன்; மதித்து உகந்த
மெய் அணி நீற்றன்; விழுமிய வெண்மழுவாள்படையன்;
செய்யகமலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை; ஆரா அமுதினை;—நாம் அடைந்து ஆடுதுமே.

வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர்பிரான் திரு வேதிகுடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,—நாம் அடைந்து ஆடுதுமே.

வழமையானது
நாவுக்கரசர்

6:70 நாவுக்கரசர்; …கயிலாயநாதனையே காணல் ஆமே!

1

தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கேரவல்-
வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன்பூண்டி,
முழையூர், பழையாறை, சத்திமுற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும்,
ஆக்கூரில்-தான்தோன்றிமாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேராவூரும்,
பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும்
கூர் ஆர் குறுக்கைவீரட்டான(ம்)மும்,
கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும்,
கயிலாய்நாதனையே காணல் ஆமே.

இடைமருது, ஈங்கோய், இராமேச்சுரம்,
இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர்,
சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர்,
தலையாலங்காடு, தலைச்சங்காடு,
கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர்,
கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு,
கடைமுடி, கானூர், கடம்பந்துறை,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

எச்சில்இளமர், ஏமநல்லூர்,
இலம்பையங்கோட்டூர், இறையான்சேரி,
அச்சிறுப்பாக்கம், அளப்பூர், அம்பர்,
ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை,
கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்-
கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி,
கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர்,
கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும்,
நின்றியூர், நீடூர், நியமநல்லூர்,
இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர்,
எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம்,
கடம்பை இளங்கோயில்தன்னிலுள்ளும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர்,
வக்கரை, மந்தாரம், வாரணாசி,
வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி,
விளமர், விராடபுரம், வேட்களத்தும்,
பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம்,
பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூரும்,
கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர்,
வேதிகுடி, விசயமங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணா-
மலை, ஆலங்காடும், அரதைப்பெரும்-
பாழி, பழனம், பனந்தாள், பாதாளம்,
பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண்
காழி, கடல் நாகைக்காரோணத்தும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,
உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும்,
மஞ்சு ஆர் பொதியில்மலை, தஞ்சை, வழுவூர்-
வீரட்டம், மாதானம், கேதாரத்தும்,
வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா,
வேதீச்சுரம், வில்வீச்சுரம், வெற்றியூரும்,
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி,
தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல்,
குருகாவூர்வெள்ளடை, குமரி, கொங்கு(வ்),
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்,
ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும்,
கண்டியூர்வீரட்டம், கருகாவூரும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

நறையூரில் சித்தீச்சுரம், நள்ளாறு,
நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை,
தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம்,
உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர்,
ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும்,
கயிலாயநாதனையே காணல் ஆமே.

புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர்,
புறம்பயம், பூவணம், பொய்கைநல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல்,
வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்!
கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற
கயிலாயநாதனையே காணல் ஆமே.

வழமையானது
நாவுக்கரசர்

6:94 நாவுக்கரசர்; இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி!

1

இரு நிலன்ஆய், தீஆகி, நீரும்ஆகி,
இயமானனாய், எறியும் காற்றும்ஆகி,
அரு நிலைய திங்கள்ஆய், ஞாயிறுஆகி,
ஆகாசம்ஆய், அட்டமூர்த்திஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமேஆகி,
நெருநலைஆய், இன்றுஆகி, நாளைஆகி,
நிமிர்புன்சடை அடிகள் நின்றஆறே!

மண்ஆகி, விண்ஆகி, மலையும்ஆகி,
வயிரமும்ஆய், மாணிக்கம் தானேஆகி,
கண்ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும்ஆகி,
கலைஆகி, கலைஞானம் தானேஆகி,
பெண்ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும்ஆகி,
பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம்ஆகி,
எண்ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும்ஆகி,
எழும்சுடர்ஆய் எம் அடிகள் நின்றஆறே!

கல்ஆகி, களறுஆகி, கானும்ஆகி,
காவிரிஆய், கால்ஆறுஆய், கழியும்ஆகி,
புல்ஆகி, புதல்ஆகி, பூடும்ஆகி,
புரம்ஆகி, புரம்மூன்றும் கெடுத்தான்ஆகி,
சொல்ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும்ஆகி,
சொல்ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும்ஆகி,
சுலாவுஆகி, சுலாவுக்கு ஓர் சூழல்ஆகி,
நெல்ஆகி, நிலன்ஆகி, நீரும்ஆகி,
நெடுஞ்சுடர்ஆய் நிமிர்ந்து, அடிகள் நின்றஆறே!

காற்றுஆகி, கார்முகில்ஆய், காலம்மூன்றுஆய்,
கனவுஆகி, நனவுஆகி, கங்குல்ஆகி,
கூற்றுஆகி, கூற்று உதைத்த கொல் களிறும்ஆகி,
குரைகடல்ஆய், குரைகடற்கு ஓர் கோமானும்(ம்)ஆய்,
நீற்றானாய், நீறு ஏற்ற மேனிஆகி,
நீள் விசும்புஆய், நீள் விசும்பின் உச்சிஆகி,
ஏற்றனாய், ஏறு ஊர்ந்த செல்வன்ஆகி,
எழும்சுடர்ஆய், எம் அடிகள் நின்றஆறே.

தீஆகி, நீர்ஆகி, திண்மைஆகி,
திசைஆகி, அத் திஐசக்கு ஓர் தெய்வம்ஆகி,
தாய்ஆகி, தந்தையாய், சார்வும்ஆகி,
தாரகையும் ஞாயிறும் தண்மதியும்ஆகி,
காய்ஆகி, பழம்ஆகி, பழத்தில் நின்ற
காய்ஆகி, பழம்ஆகி, பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும் தானேஆகி,
நீஆகி, நான்ஆகி, நேர்மைஆகி,
நெடுஞ்சுடர்ஆய், நிமிர்ந்து அடிகள் நின்றஆறே.

அங்கம்ஆய், ஆதிஆய், வேதம்ஆகி,
அருமறையோடு ஐம்பூதம் தானேஆகி,
பங்கம்ஆய், பலசொல்லும் தானேஆகி,
பால்மதியோடு ஆதிஆய், பான்மைஆகி,
கங்கைஆய், காவிரிஆய், கன்னிஆகி,
கடல்ஆகி, மலைஆகி, கழியும்ஆகி,
எங்கும்ஆய், ஏறு ஊர்ந்த செல்வன்ஆகி,
எழும்சுடர்ஆய், எம் அடிகள் நின்றஆறே.

மாதாபிதாஆகி, மக்கள்ஆகி,
மறிகடலும் மால் விசும்பும் தானேஆகி,
கோதாவிரிஆயி, குமரிஆகி,
கொல் புலித் தோல் ஆடைக் குழகன்ஆகி,
போதுஆய் மலர் கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன்ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதேஆகி,
அழல்வண்ணவண்ணர்தாம் நின்றஆறே!

ஆஆகி, ஆவினில்ஐந்தும்ஆகி,
அறிவுஆகி, அழல்ஆகி, அவியும்ஆகி,
நாஆகி, நாவுக்கு ஓர் உரையும்ஆகி,
நாதனாய், வேதத்தின் உள்ளோன்ஆகி,
பூஆகி, பூவுக்கு ஓர் நாற்றம்ஆகி,
பூக்குளால் வாசம்ஆய் நின்றான்ஆகி,
தேஆகி, தேவர் முதலும்ஆகி,
செழுஞ்சுடர்ஆய், சென்று அடிகள் நின்றஆறே!

நீர்ஆகி, நீள் அகலம் தானேஆகி,
நிழல்ஆகி, நீள் விசும்பின் உச்சிஆகி,
பேர்ஆகி, பேருக்கு ஓர் பெருமைஆகி,
பெரு மதில்கள்மூன்றினையும் எய்தான்ஆகி,
ஆரேனும் தன் அடைந்தாரதம்மைஎல்லாம்
ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம்
பார்ஆகி, பண்ஆகி, பாடல்ஆகி,
பரஞ்சுடர்ஆய், சென்று அடிகள் நின்றஆறே!

மால்ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்)ஆய்,
மருக்கம்ஆய், அருக்கம்ஆய், மகிழ்வும்ஆகி,
பால்ஆகி, எண்திசைக்கும் எல்லைஆகி,
பரப்புஆகி, பரலோகம் தானேஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்)ஆய்,
பூதங்கள்ஆய், புராணன் தானேஆகி,
ஏலாதனஎலாம் ஏல்விப்பானாய்,
எழும்சுடர்ஆய், எம் அடிகள் நின்றஆறே!

வழமையானது
நாவுக்கரசர்

6:95 நாவுக்கரசர்; அப்பன் நீ! அம்மை நீ!

1

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,
அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
துணைஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,
இறைவன் நீ—ஏறு ஊர்ந்த செல்வன்நீயே.

வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;
வெய்ய வினைப்பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;
எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம்அல்லோம்—
அம் பவளச்செஞ்சடைமேல் ஆறுசூடி,
அனல்ஆடி, ஆன்அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவளவண்ணர், செங்குன்றவண்ணர்,
செவ்வானவண்ணர், என் சிந்தையாரே.

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே?
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே?
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே?
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே?
காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?

நல் பதத்தார் நல் பதமே! ஞாமமூர்த்தீ!
நலஞ்சுடரே! நால்வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற
சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்தன்னுள்
நிலாவாத புலால்உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யான் உன்னை விடுவேன்அல்லேன்—
கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!

திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும்,
திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும்,
பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு பலதளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்,
விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும்,
அவைஎல்லாம் ஊர் அல்ல; அடவி-காடே!

திருநாமம் அஞ்சுஎழுத்தும் செப்பார்ஆகில்,
தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார்ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் குழார் ஆகில்,
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார்ஆகில்,
அருநோய்கள் கெட வெண்நீறு அணியார்ஆகில்,
அளி அற்றார்; பிறந்தஆறு ஏதோ என்னில்,
பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழில்ஆகி, இறக்கின்றாரே!

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்;
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும்ஆனாய்;
மன்ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம்ஆனாய்;
மறைநான்கும்ஆனாய்; ஆறுஅங்கம்ஆனாய்;
பொன்ஆனாய்; மணிஆனாய்; போகம்ஆனாய்;
பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
என் ஆனாய்! என் ஆனாய்! என்னின்அல்லால்,
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?

அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்;
அருள்நோக்கில்-தீர்த்தநீர் ஆட்டிக்கொண்டாய்;
எத்தனையும் அரிவை நீ எளியைஆனாய்;
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன்,
பிழைத்தனகள்அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ!
எம்பெருமான் திருக்கருணை இருந்தஆறே!

குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்;
குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்;
நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்குஅல்லாது ஒழிந்தேன்அல்லேன்;
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈயமாட்டேன்;
என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார்அவர் செல்வம் மதிப்போம்அல்லோம்,
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார்அகில்;
அங்கம்எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர்ஆகில்,
அவர்கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!

வழமையானது
நாவுக்கரசர்

6:98 நாவுக்கரசர்; நாம் ஆர்க்கும் குடி அல்லோம்!

1

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மைஆன
சங்கரன், நல் சங்கவெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள்ஆய்க்
கொய்ம்மலர்ச்சேவடி இணையே குறுகினோமே.

அகலிடமே இடம்ஆக ஊர்கள்தோறும்
அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல்இடம் அம் அம்பலங்கள்; பூமிதேவி
உடன்கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்
சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;
மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி,
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம்;
நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம்;
கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்
கல்மனமே நல் மனமாக் கரையப்பெற்றோம்;
பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும்
பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.

உறவுஆவார், உருத்திரபல்கணத்தினோர்கள்;
உடுப்பன கோவணத்தொடு கீள் உளஆம்அன்றே;
செறுவாரும் செறமாட்டார்; தீமைதானும்
நன்மைஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;
நறவு ஆர் பொன்இதழி நறுந் தாரோன் சீர் ஆர்
நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;
சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச்சோதியையே தொடர்வுஉற்றோமே.

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர்ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம்அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.

மூஉருவில் முதல்உருசாய், இரு-நான்கு ஆன
மூர்த்தியே! என்று முப்பத்துமூவர்-
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும்
நா உடையார் நமை ஆள உடையார்அன்றே;
நாவல்அம்தீவுஅகத்தினுக்கு நாதர்ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும்,
கடவம்அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,
நெருப்பினொடு, காற்றுஆகி, நெடு வான்ஆகி,
அற்பமொடு பெருமையும்ஆய், அருமைஆகி,
அன்புஉடையார்க்கு எளிமையதுஆய், அளக்கல் ஆகாத்
தற்பரம்ஆய், சதாசிவம்ஆய், தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்புஉடைய பேசக் கடவோம்; பேயர்
பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே.

ஈசனை, எவ்உலகினுக்கும் இறைவன்தன்னை,
இமையவர்தம் பெருமானை, எரிஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண்நீற்றானை,
சிலம்புஅரையன் பொன்பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப்பெற்றோம்;
நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம்எல்லாம் மறந்தோம்அன்றே;
வந்தீர் ஆர்? மன்னவன்ஆவான்தான் ஆரே?

சடை உடையான்; சங்கக்குழை ஓர் காதன்;
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,
விடை உடையான்; வேங்கைஅதள் மேல்ஆடை,
வெள்ளி போல் புள்ளி உழை-மான்தோல் சார்ந்த
உடை, உடையான்; நம்மை உடையான்கண்டீர்;
உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம்;
பாசம் அற வீசும் படியோம், நாமே.

நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;
நாண்அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்;
ஆவா! என்று எமை ஆள்வான், அமரர்நாதன்,
அயனொடு மாற்கு அறிவு அரிய அனல்ஆய் நீண்ட
தேவாதிதேவன், சிவன், என் சிந்தை
சேர்ந்து இருந்தான்; தென்திசைக்கோன் தானே வந்து,
கோஆடி, குற்றேவல் செய்கு என்றாலும்,
குணம்ஆகக் கொள்ளோம்; எண்குணத்து உளோமே.

வழமையானது
நாவுக்கரசர்

5:99 நாவுக்கரசர்

1

பாவமும் பழி பற்றுஅற வேண்டுவீர்!
ஆவில்அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஒங்கு மாகடல்ஓதம்நீராடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்?
இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்?
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்?
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதிநூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அங்கம்ஒர்ஆறும் உணரில் என்?
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.

காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்?
வேலைதோறும் விதிவழி நிற்கில் என்?
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்?
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

கானம், நாடு, கலந்து திரியில் என்?
ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்?
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்?
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.

கூட வேடத்தர்ஆகிக் குழுவில் என்?
வாடி ஊனை வருத்தித் திரியில் என்?
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப்
பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.

நன்று நோற்கில் என்? பட்டினிஆகில் என்?
குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்?
சென்று நீரில் குளித்துத் திரியில் என்?
என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

கோடிதீர்த்தம் கலந்து குளித்து அவை-
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.

மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக்
குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி
பற்றுஇலாதவர்க்குப் பயன் இல்லையே.

வழமையானது