பெரியாழ்வார்

கண்ணன் பாலக் கிரீடை

பெரியாழ்வார் திருமொழி
*********************
1

வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை
புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற
அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்

வருக வருக வருக இங்கே
வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம்
காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்
அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
பாவியேனுக்கு இங்கே போதராயே

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
செய்வதுதான் வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்
வாழ ஒட்டான் மதுசூதனனே

கொண்டல்வண்ணா இங்கே போதராயே
கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
திருநாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி
ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான் கற்ற கல்வி தானே

பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்
போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடைக்குட்டனேயோ
குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா
வித்தகனே இங்கே போதராயே

செந்நெல் அரிசி சிறு பருப்புச்
செய்த அக்காரம் நறுநெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே

கேசவனே இங்கே போதராயே
கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இலாதார் அகத்து இருந்து
நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்
தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்
தாமோதரா இங்கே போதராயே

கன்னல் இலட்டுவத்தோடு சீடை
காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்
இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே

சொல்லில் அரசிப் படுதி நங்காய்
சூழல் உடையன் உன்பிள்ளை தானே
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக்கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே

வழமையானது
பெரியாழ்வார்

கண்ணன் மீது கன்னியர் காமுறல்

1

பெரியாழ்வார் திருமொழி-
**********************
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
வசை அறத் திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி
பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்
அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே

சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்
மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்
அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்
கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்
கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில்லா வளை கழன்று துகில்
ஏந்து இள முலையும் என் வசம் அலவே

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே

சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்
வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை
அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே

சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே

வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள்
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக்
கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே

வழமையானது
பெரியாழ்வார்

திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

பெரியாழ்வார் திருமொழி
1
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரற் சீதைக்கு ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியிற் கண்டார் உளர்

கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டார் உளர்

தோயம் பரந்த நடுவு சூழலிற் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர்

நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டார் உளர்

பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மா மணிவண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு பௌவம் எறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர்

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம் கைசெய்யக் கண்டார் உளர்

நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற அரசர்கள்தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப்
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்

மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இருநிலம் புக்கு இடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர்

கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடு உரைத்துப்
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனிப் புதுவைத்
திருவிற் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே

வழமையானது
பெரியாழ்வார்

கண்ணன்திருவவதாரம்

பெரியாழ்வார் திருமொழி

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே

கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே

வழமையானது
பெரியாழ்வார்

எம்பிரான் அம்புலிப் பருவம்

பெரியாழ்வார் திருமொழி –

தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத்தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ

என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலைமேல் இருந்துஉன்னையே சுட்டிக்காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற
மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக்கூகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங்காவிடில்
விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா

சிறியன் என்று என்இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா

மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே

வழமையானது